எண்ணங்களின் வண்ணங்களை
வார்த்தெடுக்கும் பட்டறையின்
வளையாத வானவில்.
ஓசையற்ற மெட்டுக்கு
உணர்வுகள் எழுதும்
மென்மையான கவிதை.
கரைக்கின்ற நீரிலும்
கரையாதப் பனிக்கட்டி,
மிதக்கின்ற பிடிவாதம்.
யாரோ வந்து திறக்கும்வரை
முத்துகளைக் காட்டாமல்
மூடியிருக்கும் சிப்பி.
வாழ்க்கையை அழகாக்கும்
வார்த்தைகளின் வரிசையில்,
சின்னஞ்சிறு இடைநிறுத்தம்.
செல்வத்துள் செல்வமாம்
செவிச்செல்வம் சேர்த்து வைக்க,
செவிலியின் ஒத்துழைப்பு.
உணர்வுகளற்ற வார்த்தைக்கும்,
வார்த்தைகளற்ற உணர்வுக்கும்
இடையே நின்று வாதாடும் வக்கீல்.
பொங்கும் உணர்ச்சிகளையும்,
வார்த்தைகளின் பிரவாகத்தையும்
அணைக்குள் அடைக்கும் மதகு.
சொல்வதற்கு ஆயிரம் இருந்தாலும்,
சொல்ல மனமில்லாத சலிப்பின் சத்தம்.
குழந்தைகளின் முன்னே குறுநாவல்.
கோபம் என்ற குரங்கின்,
குறுவாளைப் பிடுங்கி,
உறைக்குள் வைக்கும் போராட்டம்.
பொருந்துகின்ற சூழலுக்கும்,
பொருந்தாதப் புரிதலுக்கும்
பொருத்தமான பதில்.
உள்ளே சிக்கி உறுத்துகின்ற
கடினங்களைக் கரைத்துவிடும்
செரிமானத்தின் செயல்பாடு.
இதுவும் கடந்துபோகும்!
என்ற தத்துவ நிலையை
கடக்க உதவும் ஒரு தோணி.
சொற்களால் பயனில்லை
என்று எண்ணும்போது
சொந்தமாகும் ஒரு உறவு.
ஆயிரம் வார்த்தைகளின்
அழகான அணிவகுப்பு.
பேசும் படத்தில் பேசாக் காட்சி.
எதிர்வாதம் தவிர்க்கவும்,
எளிமையாக எதிர்க்கவும்,
வலிமையின் ஆயுதம்.
மனக்குவிப்பை வெற்றிகொள்ள
மனமுவந்து வேண்டுகின்ற
முதல்நிலை குவிஆடி.
வந்துவிழும் வார்த்தைகளை
வடிகட்டி நிறுத்திவைக்க
வசமாகும் ஒரே வழி.
கோடையில் மழையாக,
தனிமைக்குத் துணையாக
தனக்குள் கேட்கும் தாலாட்டு.
உலகத்தின் வார்த்தையெல்லாம்
உதவாத நேரத்தில்
உள்ளம் பேசும் ஒரு வார்த்தை.
மனம் என்னும்
மாயக் குழந்தையின்
மந்திர மொழி.
# நன்றி.