வெயிலில் நிழல்.
கோடையின் கொடுவெயிலோடு
பேச்சுவார்த்தை நடத்தும் மரம்,
குளிர்நிழல் கொடுத்து மடியில்
இளைப்பாறுதல் தருகிறது.
வெளுக்கும் வெயிலோ
குடையைச் சுடுகிறது,
குடையின் நிழலோ
கொடையாய் வருகிறது.
ஒளியில் நிழல்.
ஒளியின் இருப்புக்கு ஒற்றை சாட்சி.
விரிந்தும் விலகியும் நிழலின் நீட்சி.
சுருங்கியும் நெருங்கியும் நிகழும் மீட்சி.
ஒளியைத் தடுக்கும் பொருளின் காட்சி.
உலகின் அழகு வண்ணங்களின் ஆட்சி.
அழகின் உயிர்ப்போ நிழலின் மாட்சி.
ஒளியில் வெளிப்படும் இரண்டாம் வடிவம்.
உலக இயக்கத்தின் உடனடி படிமம்.
கருநிழலின் நிழலாய்ப் புறநிழலும் நின்று,
நிழலுக்கு நிழல் வரையும் இருட்டு ஓவியம்.
பின் இருக்கும் ஒளியை முன்னே காட்ட
நீட்டி அளந்திடும் நீள அகலம்.
ஒவ்வொரு பொருளுக்கும் உற்ற நண்பன்.
எதற்கும் அஞ்சாது உடன்வரும் துணைவன்.
இணைப்பில் இருக்கும் இணையற்ற தோழன்.
அசைக்க முடியாத அதிசய வீரன்.
நிறம் மாறும் உலகில் நிறமில்லா நிழலே,
நிலைமாறும் உருவத்தின் நிலையான நிழலே
இருளோடு கலந்தாலும், மிகுஒளியில் ஒளிந்தாலும், நீ!
ஒளி வரையும் வரைபடம், ஒவ்வொன்றும் உன் நிழற்படம்.
நல்லது, அல்லது வேறுபாடில்லை.
உயர்வு தாழ்வெனும் பாகுபாடில்லை.
குணமோ குற்றமோ கோபமுமில்லை.
எதுவோ அது எனும் ஞானியின் எல்லை.
#நன்றி .