உண்மைகள். Facts. Unmaigal.

உண்மைகள். Facts. Unmaigal.

வாழ்க்கை. 

விழித்தால் தெரியும் காட்சிபோல 
கற்றால் வருவது கல்வி.

நடந்தால் தொடரும் பாதைபோல
தெளிந்தால் வளர்வது அறிவு. 

கடந்தால் புரியும் பயணம்போல
உணர்ந்தால் பெறுவது அனுபவம்.

உண்டால் நலம்தரும் உணவுபோல
பண்பால் உயர்வது மனவளம்.

தந்தால் பெருகிடும் மகிழ்ச்சிபோல
அன்பால் சிறப்பது வாழ்க்கை.

 நிறைவும், சிறகும்.


காலையில் விழித்த காக்கையொன்று
கூட்டத்திலிருந்து தனித்து வந்து,
குளத்தில் நின்ற கொக்கின் அழகை
வியந்து அருகே சென்றது.


தானும் அதுபோல் இல்லையென்று
காக்கை ஏங்கி வருந்தியதும்
வெள்ளை நிறத்தை வெறுத்த கொக்கோ
கிளிதான் அழகென மெச்சியது.


கிளையின் மீதே இருந்த கிளியும்
சலிப்பைக் காட்டிப் பேசியது.
ஒற்றை நிறத்தை உயர்த்தும் நீங்கள்
மயிலின் தோகை கண்டதுண்டா?


அதிசய அழகைக் காணும் ஆவலில்,
அலைந்து திரிந்து மூன்றும் களைத்து,
கண்ணில் கண்ட பூங்கா ஒன்றில்
மரத்தின் கிளையில் அமர்ந்தன.


குதூகலக் குழந்தைகள் கூச்சல் கேட்டு,
கூண்டில் அடைத்த மயிலொன்று
அங்குமிங்கும் அகவல்பாடி
அழகாய் தோகையும் விரித்தது.


கிளியும் கொக்கும் காகமும் மகிழ்ந்து
தோகையின் அழகை இரசித்தன.
தம்மை தாழ்த்தும் மனச்சிறை அகற்றி,
அவைதம் சிறப்பை உணர்ந்தன.


முடக்கும் எண்ணத்தை முறித்ததுமே,
வளரும் எண்ணங்கள் துளிர்த்தன.
அடுத்தவர் சிறப்பைத் தாமும் மதித்து,
தனித்திறன் காணத் தெளிந்தன.


சுயத்தை அறியும் சுதந்திரம் ஒன்றே
உயிரின் அழகென உணர்ந்தன.
சிந்தை வளமும், வாழும் முறையும்
அழகின் சிறப்பென உயர்ந்தன.


அழகு என்பதன் அர்த்தம் புரிந்ததும்
பழகும் விதமும் மாறியதும்
இருப்பதில் நிறைவும், பறப்பதில் சிறகும்
வாழ்க்கையின் அழகெனப் பறந்தன.

# நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *