உணர்வுகளும், உணர்ச்சிகளும். பலமா? பலவீனமா? Feelings and Emotions. Are they Strength or Weakness? Unarvugalum, Unarchchigalum. Balama? Balaveenama?

உணர்வுகளும், உணர்ச்சிகளும். பலமா? பலவீனமா? Feelings and Emotions. Are they Strength or Weakness? Unarvugalum, Unarchchigalum. Balama? Balaveenama?

உணர்வுகள்:

இயல்பாக நம் மனதில் தோன்றுகின்ற உணர்வுகளும், நாம் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சிகளுமே நாம் உயிர்ப்போடு வாழ்வதற்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன.  வாழ்க்கையை வடிவமைத்துக் கட்டமைக்கும் சக்திபெற்ற இந்த உணர்வுகளே, அவை வெளிப்படுகின்ற சூழ்நிலைகளில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ செயல்படுவதன் மூலம் பலமாகவோ பலவீனமாகவோ அறியப்படுகின்றன. 

சரியான பக்குவத்தில் இனிமையாகக் கனிந்து உண்ணத்தகுந்ததாக இருக்கும் கனியின் சுவை, பக்குவம் கடந்த நிலையில் அதன் தன்மை மாறிவிடுவதுபோல, நேர்மறையான பக்குவத்தில் இனிமை தருகின்ற உணர்வுகளும் உணர்ச்சிகளும் பலம் தருவனவாகவும், அவற்றின் எல்லை கடந்த நிலையில் எதிர்மறையான விளைவுகளைத் தருகின்ற பலவீனமாகவும் வெளிப்படுகின்றன. 

இவ்வாறு மனதில் தோன்றுகின்ற பல உணர்வுகளுள் ஒரு சிலவற்றை மட்டும் உதாரணமாக எடுத்துக்கொண்டு அவை ஒரு குறிப்பிட்ட எல்லையில் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ செயல்படுகின்ற சூழலில் பலமாகவும் பலவீனமாகவும் வெளிப்படுகின்ற நிலைகளை இந்தப் பதிவில் சிந்திக்கலாம் .

அன்பு (Affection, Love): 

உலக இயக்கத்தின் முக்கியமான சக்தியாக விளங்கும் அன்பு, மனிதனின் அடிப்படை தகுதியாக, வாழ்க்கையின் பொருளாக, நம்பிக்கையின் சாட்சியாக, பாதுகாப்பின் பகிர்வாக, வளமான உயர்வுக்குக் காரணமாக விளங்குகிறது. இவ்வாறு, உயிர்ப்பின் சுவாசமாக விளங்கும் அன்பு நேர்மறையான உணர்வாகவும், உயர்ந்த வாழ்க்கையின் பலமாகவும் வெளிப்படுகிறது.

இத்தகைய அன்பு அதன் நேர்மறையான தடம்மாறி தவறாகப் பயன்படுத்தபடும் நிலையில், அதிகாரப் பிரயோகத்திற்கான ஒரு வாய்ப்பாக, சுயசிந்தனையற்ற அடிமைத் தனத்திற்குக் காரணமாக எல்லை மீறுகின்ற சூழலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பலவீனமாக வெளிப்படுகிறது.

மற்றவர் உணர்வுகளையும் மதித்து, அன்பைத் தருவதும் பெறுவதும் இருதரப்பும் உணரும் வகையில், சுயமரியாதையோடு பகிரப்படும் அன்பு என்றும் நேர்மறையான விளைவுகளைத் தரக்கூடிய முதன்மையான உணர்வு ஆகும்.  எனவே, அன்பு என்ற அமுதத்தின் விளைவுகளைக் கருத்தில்கொண்டு அது இயல்பாக வெளிப்படும் நிலையில் மிக உயர்ந்த உணர்வாகப் போற்றப்படுகிறது. 

பொறுமை:

செயல்படுவதற்கு முன்பு, சூழ்நிலையின் தன்மையை, உறவுகளின் மனநிலையைப் புரிந்துகொள்ளவும், சுமுகமான முடிவுகளைச் சிந்தித்துத் தேர்ந்தெடுக்கவும் மிகவும் அவசியமான உணர்வாக உள்ளது.  இதுவே கட்டுப்பாட்டோடு செயல்படுவதற்கான நிதானத்தைத் தருகின்ற பிரதானமான உணர்வாகச் செயல்படுகிறது.  எந்தச் சூழ்நிலையிலும் பதட்டம் இல்லாமல் நேர்த்தியாகச் செயல்படுவதற்கு உதவும் பொறுமை நேர்மறையான குணத்தின் வெளிப்பாடாகச் சூழ்நிலைகளைச் சிறப்பாகக் கையாள உதவும் பலமாகச் செயல்படுகிறது.

ஆனால், பொறுமை என்ற முகமூடியோடு வெளிப்படுகின்ற தயக்கம், வேலைகளைத் தள்ளிப்போடுகின்ற நோக்கம், தாமதமாகச் செயல்படுகின்ற பழக்கம் போன்றவை நேரடியாகவோ மறைமுகவோ எதிரான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.  பொறுமை என்ற போலிப் பெயரில் காலம் தாழ்த்தும் அலட்சியம் அதன் எதிர்விளைவுகளைக் காலம் தாழ்த்தாமல் சந்திக்கின்ற பலவீனமாக வெளிப்படுகிறது.

எனவே, பொறுமை என்பது மனமுதிர்ச்சியின் அடையாளமாக, விவேகத்தின் வெளிப்பாடாக, வாழ்க்கையின் இயல்பு உணர்ந்து நிதானமான உறுதியாகச் செயல்படும்போது பெருமை தருகின்ற பலமாகவும், முன்னேற்றத்தின் தடையாக, இயலாமையின் வெளிப்பாடாக இருக்கும் நிலையில் பலவீனமாகவும் அறியப்படுகிறது.

கோபம்:

கோபம் என்பது மனிதனுக்குத் தோன்றுகின்ற தவிர்க்க முடியாத ஒரு உணர்வுதான்.  ஆனால், இதை நேர்மறையாக எப்படிப் பார்க்க முடியும் என்று தோன்றலாம்.  நிபந்தனைகளுக்கு உட்பட்ட எல்லைக்குள் நன்மை செய்கின்ற உணர்வுகளுள் கோபம் ஒரு சிறந்த உதாரணம்.  இயல்பான வாழ்க்கையில் தனிமனிதனுக்குத் தோன்றுகின்ற நியாயமான கோபம் பாம்பின் சீற்றம்போல உடனடி எச்சரிக்கையாக, முதல்நிலை தற்காப்பாக, அதன் எல்லை உணர்ந்து விழிப்போடு செயல்படும் நிலையில் நேர்மறை உணர்ச்சியாக வெளிப்படுகிறது.  

இவ்வாறு, சுயமரியாதையின் பாதுகாப்பு வளையமாக, உரிமையின் வரைமுறை உணர்த்தும் நியாயமான தனிமனிதக் கோபமும், சமூக நலனுக்காகப் போராடுகின்ற வலிமையின் கோபமும் நேர்மறை ஆற்றலாக வெளிப்படுகின்ற நிலையில் தீமையை எரிக்கும் நெருப்புப் போன்ற சக்திமிக்க உணர்வாகும்.  தனிமனித வன்மம் இல்லாத, செயல்பாடுகளை ஒழுங்கு செய்யக்கூடிய கண்டிப்பு கோபத்தின் நிழலாகத் தெரிந்தாலும், அது அக்கறையின் உண்மையான பலமாக வெளிப்படுகிறது. 

ஆனால், ஆணவத்தால் அல்லது மனவளம் இன்மையால் மற்றவரைத் துன்பப்படுத்தி, சூழ்நிலையை எதிராக மாற்றுகின்ற அகங்காரத்தின் தாக்கம், உள்ளங்கையில் வைத்த நெருப்புத் துண்டுபோல, முதலில் அது தங்கியிருக்கும் மனதைப் புண்ணாக்கிவிடும் என்று சான்றோர்கள் கூறுகிறர்கள்.

மனிதனின் அவசியமான உணர்வுகளுள் கோபமும் உள்ளது என்றாலும் அதனுடைய எல்லை மிகமிக நுட்பமாகச் செயல்படுகிறது.  விளைவுகளின் வீரியம் உணர்ந்து முறையாகக் கையாளப்படுகின்ற இடத்தில் நேர்மறையாகவும், பண்புநிலை மறந்து செருக்கினால் வெளிப்படும் கோபம் பலவீனமாகவும் வெளிப்படுகிறது. 

பயம் : 

தேவையற்ற, ஒழுக்கமற்ற, நேர்மையற்ற செயல்களை நினைப்பதற்கும் செய்வதற்கும் அஞ்சுவது இயல்பான நேர்மறை உணர்வாகும். ஆபத்தான உயிரினங்கள் அல்லது சூழ்நிலைகளைக் கண்டதும் விலகுவதற்கும், நியாயமற்ற வாய்ப்புகளை மறுப்பதற்கும் காரணமாக இருக்கும் பயம் பாதுகாப்பிற்கும் உறுதியான பண்பிற்கும் உதவும் உணர்வாகும்.  அதுபோலவே, புதிய முயற்சிகள், மிகத் துல்லியமாகச் செயல்பட வேண்டிய முக்கியமான தருணங்களில் செயல்திறனை மேம்படுத்துகின்ற பயம் அந்த வேலையின் மீதிருக்கும் பொறுப்பின் காரணமாக ஏற்படுகின்ற கூடுதல் கவனமாகும்.

ஆனால், மனதில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தி, முயற்சியின் பாதையில் தடைக்கல்லை உருவாக்குகின்ற பயம் எதிர்மறையான உணர்வாக மாறுகிறது.  இந்தப் பயமே, இயல்பாக இயங்க முடியாத பதட்டமாக, புதிய மாற்றங்களையும், சாதகமற்ற சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள முடியாத மனநிலையாக எல்லை மீறும்போது பலவீனமாக வெளிப்படுகிறது.

எச்சரிக்கை உணர்வாகச் செயல்படும் நிலையில் நேர்மறையாகவும், எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் நிலையில் விழிப்போடு கவனித்துத் தவிர்க்க வேண்டிய உணர்வாகவும் இருக்கிறது.

வருத்தம் : 

உணர்வுகளின் கலவையாகவே மனித வாழ்க்கை இருக்கிறது என்பதால் அதில் வருத்தம் என்கிற வலியும் தவிர்க்க முடியாத உணர்வாக அவ்வப்போது மனதைத் தாக்குகிறது.  இந்த உணர்வின் அனுபவம்தான் மற்ற உயிர்களின் வலியை தம் வலியாக உணர்ந்து ஆறுதல் கூறும் அன்பாக, வலியைப் போக்கி உதவக்கூடிய நேர்மறையான சக்தியாக வெளிப்படுகிறது.

ஒரு சில வெற்றிகளைச் சந்திக்கும்போது மனம் மகிழ்வது போலவே, தவிர்க்கமுடியாத தோல்விகளை, இழப்புகளைச் சந்திக்கும்போது மனம் வருத்தம் அடைவதும் இயற்கையே. எதுவுமே நிரந்தரமில்லாத மனித வாழ்க்கையில் எந்த வருத்தமும் நிரந்தரமில்லை என்றாலும், மனதின் சில வலிகளைக் கரையவைக்கும் சக்தி காலத்தின் கையில் மட்டுமே உள்ளது என்று உணருகின்ற நிலையில் மனஉறுதியை ஏற்படுத்துகின்ற ஒரு உணர்வு. 

தவிர்க்க முடியாத தோல்வியை, இழப்பை எதிர்கொள்கின்ற நிலையில், விழுவதும் தவறில்லை என்று உணர்ந்து, மீண்டும் எழுவதற்கான மனவுறுதியைப் பெறுவதற்கு இயற்கை தருகின்ற வாய்ப்பு.  தோல்வி என்பது வெற்றியின் பாதையில் சந்திக்கும் ஒரு மைல்கல், செய்யப்பட்ட முயற்சிக்குக் கிடைத்த சாட்சி என்ற நேர்மறையான எண்ணம், அடுத்த முயற்சியைக் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவதற்கு உதவுகின்ற பலமாக, மனஉறுதியின் வெளிப்பாடாக இருக்கிறது.  

வாழ்க்கை புத்தகத்தில் நீக்க முடியாத சில வருத்தங்கள் ஆழமான அனுபவத்தின் பக்கங்களாக நிலைத்து விடுவதைத் தவிர்க்க முடியாது.  ஆனால், மனதில் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டிய இந்த உணர்வு நாட்பட்ட கவலையாக வளர்ந்து, தொடர்ந்து செயல்படமுடியாத மனச்சோர்வை ஏற்படுத்துகின்ற நிலையில் எதிர்மறை உணர்வாக மாறிவிடும் தன்மை உடையது.  மாற்றமுடியாத வாழ்க்கை இயல்புகளை ஒத்துக்கொள்ள முடியாத பலவீனமாக எல்லை மீறுகின்ற இந்த உணர்வை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது மிகமிக அவசியமானது. 

எனவே, வருத்தம் மனதை தாக்கும் வேகத்திலேயே அதை வெளியே போக்கும் வகையில் அறிவுபூர்வமான நேர்மறையான செயல்களில் ஈடுபடுவதும், அன்பானவர்கள், நம்பிக்கையானவர்களின் உதவியோடு புதிய சூழ்நிலைகளைப் பகிர்ந்துகொள்வதும் மனதைத் திடப்படுத்தும் முயற்சிகளாகும்.

இதுவரை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்கள், வெற்றிகள், பாராட்டுகள், சிறந்த முயற்சிகள் போன்றவற்றை நினைத்துப்பார்த்து மனதிற்கு ஊக்கம் கொடுத்து ஆற்றலோடு எழுந்து நடைமுறை வாழ்க்கையோடு இயைந்து செயல்படுவது மனதை மேலும் பலமாக்கும் நேர்மறையான முயற்சிகளாகும்.

மகிழ்ச்சி:   

 

மனித வாழ்க்கை இயல்பாக எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது என்றாலும் மகிழ்ச்சி என்பது உற்சாகமாகச் செயல்பட வைக்கும் ஆற்றல் மிக்க உணர்வாக வெளிப்படுகிறது.  தன்னம்பிக்கையில் உருவாகும் நன்றியுணர்வே, அதிருப்தி எனும் இருளை அகற்றி மகிழ்ச்சியின் வெளிச்சத்தை மனதில் நிறைக்கிறது.  மனதை அழகாக்கும் இந்த வெளிச்சம் சூழ்நிலையிலும் பரவுவதால், பெரும்பாலும் இது வெளிப்படுகின்ற குறிப்பிட்ட சூழ்நிலையே அந்த மகிழ்ச்சிக்குக் காரணமாக அறியப்படுகிறது. 

பூசைக்காகப் பூனையைக் கட்டிவைத்த கதைபோல, மனதில் உருவாகும் மகிழ்ச்சி நேரடி உணர்வாகப் பகிரப்படாமல், காரணத்தை மையப்படுத்தி செய்யப்படுகின்ற ஏற்பாடுகளே மகிழ்ச்சி என்ற மேலோட்டமான எண்ணமே நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.  இதன் காரணமாக உண்மையான மகிழ்ச்சியை உணராத மனதில், போதாமையும் போலித்தனமும் உருவாகிறது.  இதனால் உருவாகும் எண்ணம் எதிர்மறையாகச் செயல்படுவதோடு வாழ்க்கையைத் திசைமாற்றும் பலவீனமாகவும் வெளிப்படுகின்றது.  

சூரியனைச் சுற்றும் பூமி இரவிலும் தொடர்ந்து இயங்குவதுபோல, மகிழ்ச்சியின் வெளிச்சம் தராத மற்ற உணர்வுகளையும் அவற்றின் தன்மை அறிந்து கையாளும் முறையினால் புதிய மகிழ்ச்சி உருவாகிறது.  அவ்வாறு உருவாகும் மகிழ்ச்சியை ஒவ்வொரு செயலிலும் தொடர்ந்து உணரும் வாழ்க்கையே முழுமையான வாழ்க்கையாக அமைகிறது.  

வாழ்க்கை: 

வாழ்க்கை முக்கியமாக இரண்டு விதமான வாய்ப்புகளில் இயங்குகிறது.  ஒன்று மாற்றமுடியாத நிலையான அமைப்பாக இயற்கை கொடுத்திருக்கும் வாய்ப்பு.  இரண்டாவது நம்முடைய தனிப்பட்ட சிந்தனைகளின், முயற்சிகளின் தன்மைக்கு ஏற்ப நாம் திட்டமிட்டு அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு.

இந்த இரண்டு வாய்ப்புகளும் ஒருங்கிணைந்து இயங்கும் வாழ்க்கையை உணர்வுகளே கட்டமைக்கின்றன என்றாலும், குடும்பமாக, குழுவாக இணைந்து இயங்குகின்ற வாழ்க்கையில் சுயஉணர்வுகளை மட்டும் முன்னிறுத்தும் சுயநலமும், சுயஉணர்வுகளை மறந்த பொம்மையின் நிலையும் வாழ்க்கையின் சுவையைக் கெடுக்கும் தன்மை உடையவை. 

கல்லில் வடித்த சிலையாகவே இருந்தாலும் அதில் வெளிப்படுகின்ற உணர்வுகளைப் பொறுத்து அதற்கான இடம் தீர்மானிக்கப்படுகிறது.  இந்நிலையில் பலவகையான உணர்வுகளை, முறையாக வெளிப்படுத்தும் வாய்ப்புப் பெற்ற மனிதன், அவற்றை திறமையாகக் கையாளும் முறையினால் அவனுக்கான இடத்தையும், சிறப்பையும் பெறுகிறான்.  இவ்வாறு, மனதின் நுட்பமான உணர்வுகளை முறையாக மேலாண்மை செய்யும் திறன் வாழ்நாள் பயிற்சி என்பதால் இதில் முன்னேற்றம் காண்பதே நம்முடைய முயற்சியாக இருக்கிறது. 

இத்தகைய நேர்மறையான எல்லைக்குள் இயங்கும் உணர்வுகள், சிந்தனைகள், இரசனைகள், செயல்கள் அனைத்தும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை வண்ணமயமாக உயர்த்துவதோடு, உடன் பயணிக்கும் மற்றவர் வாழ்க்கையிலும் அழகான வண்ணங்களை ஏற்படுத்தி, நல்ல அனுபவங்களைப் பகிரும் வாய்ப்பை நமக்குத் தருகின்றன.

#  நன்றி .

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *