அன்புமொழி:
தன்னைப் போல பிறரை என்னும்
தன்மை வேண்டுமே
அந்தத் தன்மை வர உள்ளத்திலே
கருணை வேண்டுமே!
என்ற பாடலைக் கேட்டிருப்போம். இப்படித் தன்னைப் போல பிறரை என்னும் அன்பும், கருணையும் அறிவின்பாற்பட்டது என்றும், அறிவு உள்ளவர்களே பிற உயிர்களின் துன்பத்தை உணர்ந்து உதவும் தன்மையைப் பெற்றவர்களாக இருக்க முடியும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
பிற உயிர்களுக்கு ஏற்பட்ட வலியைத் தனக்கு ஏற்பட்ட வலியாக எண்ணி அந்த வலியைப் போக்க நினைப்பதே அறிவு ஆகும். எனவே, இத்தகைய அறிவைத் தருகின்ற அன்புதான் உலகமெங்கும் பேசும் ஒரேமொழி, அதுவே உண்மையான அறிவுமொழி ஆகும்.
நம்பிக்கை:
வீடு முதல் வெளி உலகம் வரை, எந்த நிர்வாகமாக இருந்தாலும் ஒருவனை நம்பிக்கைக்கு உரியவனாக நினைப்பதற்குத் தேவையான குணங்களில் அன்புதான் முதன்மையான குணமாகும்.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செயல்படுத்துவதில் உறுதி, தனக்குச் சொந்தமில்லாத பிறர் பொருளின் மீது ஆசையின்றி பணியாற்றுதல், ஆகிய நான்கு குணங்களைக் கொண்டவனே நம்பிக்கைக்கு உரியவன் என்று பொய்யாமொழிப் புலவர் கூறுகிறார்.
இவற்றில் அன்பு இல்லாமல் மற்ற மூன்று திறமைகள் இருந்தாலும் அவன் மீதுள்ள நம்பிக்கை முழுமை பெறுவதில்லை. எனவே, வீடு, உறவு, நட்பு, அலுவலகம், வணிகம், அரசியல் என எந்த இடமாக இருந்தாலும், நேர்மையான அன்போடு சேர்ந்த திறமையான செயலே தெளிவான நம்பிக்கையை ஏற்படுத்தும் சக்தி கொண்டது.
செல்வம்:
செய்க பொருளை! என்று ஆணையிட்ட வள்ளுவரே அப்பொருளை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் கூறுகிறார். அப்படித் தேடும் பொருள் நேர்மையான அன்புடன் சேர்ந்து கிடைக்கும்போதுதான் அது சிறந்த செல்வமாக இருக்கும். அவ்வாறு இல்லையெனில் அது தீமையே! என்றுணர்ந்து தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
எனவே அன்போடு தேடி, அன்போடு கிடைக்கும் செல்வமே என்றும் நிலையான இன்பம் தரும்.
பண்பு:
அரம் போல கூர்மையான அறிவு கொண்டவராக இருந்தாலும், மனிதப்பண்பு இல்லாதவர் என்றால் அவரே மரம் போன்றவர் என்கிறார். அப்படிப்பட்ட மனிதப்பண்பு என்பது எது என்று தெரிந்துகொள்ள
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
என்று கூறுகிறார். அதாவது அன்புடையவராக இருப்பதும், நல்ல குடியில் பிறந்தவர் என்னும் தகுதிக்கு உரியவராக இருப்பதுமே மனிதப்பண்பு கொண்டவராக வாழும் தகுதியைத் தரும் குணங்கள் என்கிறார்.
தன்நோய்க்கு தானே மருந்து:
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
தன்னிடம் அன்பாகப் பேசி, பழகி, தன்னை விரும்பியவர் இப்போது வேண்டாம் என்று கூறி விலகிவிட்டார். ஆனாலும் மனம் அவர் பின்னேதான் போகிறது. கிட்டாதாயின் வெட்டென மற, என்று மறக்க முடியாமல், எப்படியாவது அவரைச்சேர வேண்டும் என்று சுயமரியாதை இன்றி நினைக்கத் தூண்டும் இந்த அன்பின் வலி மிகமிகக் கொடியது என்று வள்ளுவர் கூறுகிறார்.
இத்தகைய துயர அனுபவம் காதலில் சிக்கியவர்களுக்கு மட்டுமல்ல, தூய்மையான அன்பைப் பகிர்ந்து பழகியவர்களில் ஒருவர் மற்றவரின் அன்புக்கு ஏற்றவராக இல்லாத நிலையில், அது எந்த உறவாக இருந்தாலும், அந்த அன்பு அதன் அளவுக்கே வலியைத் தந்துவிடும்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்பதுபோல், அன்பினால் ஏற்பட்ட வலியை அன்பால்தான் குணமாக்க முடியும்.
நம்மைத் தவிர்த்தவரை நினைத்துத் தவிப்பதைவிட, நமக்காகத் தவிப்பவரைத் தாங்குவதுதான் நேர்மையான அன்பாக இருக்க முடியும். மாசற்ற அன்பே மனதிற்கு உண்மையான ஆறுதலாக இருக்கும்.
புறக்கணிப்பை நினைத்து வேதனைபடும் மனதை, காத்து நிற்கும் கடமைகளை நோக்கி மடைமாற்றம் செய்வது மனதின் வலியைப் போக்கும் மருந்தாக அமையும்.
பக்குவம்:
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
மாறுபடும் மனநிலையில் உள்ளவர்களிடம் பழகும்போது மிகவும் நெருங்காமலும், விலகாமலும் நெருப்பில் குளிர் காய்வதுபோல் எச்சரிக்கையுடன் பழக வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.
ஒரு சிலரிடம், நமக்கு உள்ள அன்பை வெளிக்காட்டும் பொருட்டு அணுகுவதோ அல்லது மறுத்து விலகிச்செல்வதோ தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே மனதில் அன்பு இருந்தாலும் தாமரைஇலை தண்ணீர் போல பக்குவமாகப் பழகுதலும் அன்பின் ஒரு நிலைதான்.
வாழ்க்கை:
அன்போடு இணைந்து வாழும் வாழ்க்கையே உயிரோடு இணையும் உடம்பிற்கு ஒப்பாகும். உயிராகச் செயல்படும் அன்பு இல்லையெனில் அது வாழ்க்கையாகாது. உடல்கள் இருக்கும் இடமாகவே கருதப்படும்.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
அதனால்தான் இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாக அன்பும் அறனும் இருக்க வேண்டும் என்றும் அதுவே முழுமையான வாழ்க்கை என்றும் வள்ளுவர் வழிகாட்டுகிறார்.
அன்பே சிவம்:
அன்பைப் பெருக்கினால் உள்ளம் விரிவாகும், உலகமும் இன்பமயமாகும் எனபதைத் தன் கவிதையில் கூற வந்த பாரதிதாசன்.
தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு, என வாழ்பவன் கடுகு உள்ளம் கொண்டவன். தனது ஊருக்காக வாழ்பவன் துவரை உள்ளம்கொண்டவன். பிற நாட்டை துன்புறுத்தி தன் நாட்டை காப்பவன் தொன்னை உள்ளம், சமத்துவமாய் வாழும் உள்ளம் மாம்பிஞ்சின் உள்ளம் என்றும், உலக மக்கள் எல்லாம் ஒன்றென நினைப்பவன் தாயுள்ளம் கொண்டவன் என்றும், இத்தகைய தன்னலமற்ற அன்புதான் உலகமெல்லாம் இன்பம் பெற உழைக்கும் என்று பாரதிதாசன் பாடுகிறார்.
தனக்கு என்று நினைப்பது சுயநலமான எண்ணமாகும். ஆனால் அந்த எண்ணமே என்வீடு, என் ஊர், என் நாடு, என் மக்கள், என படிப்படியாக விரிவடைந்து என் உலகம் என்ற எண்ணத்தினால் எல்லா உயிர்களையும் நேசிக்கும் பொதுநலம் மிகுந்த எண்ணமாக வளர்கிறது.
இவ்வாறு, பார்வையை விரிவாக்கி அன்பை விருத்தி செய்தால் அகிலமே சொந்தமாகும். ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு மனிதர் வரை மட்டுமல்லாது இறைவனையும் அன்பினால் நெருங்கலாம் என்றால், அன்பு என்பது நம்மிலிருந்து துவங்குகின்ற ஆற்றல் மிகுந்த சக்தி என்பது உறுதியாகத் தெரிகிறது.
# நன்றி.