கற்றுக்கொடுப்பதும், கற்றுக்கொள்வதும். Katrukkoduppathum, Katrukkolvathum. Teaching and Learning.

சின்னஞ்சிறு கதை:

சிறுவர்களாக இருந்த, பாண்டவர்கள் ஐவரும், கெளரவர்கள் நூறுபேரும் சேர்ந்து துரோனரிடம் குருகுலக் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம் அது.  (கற்றுக்கொடுக்கும் முறையில் துரோணர் பாரபட்சம் காட்டுவதாக பீஷ்மரிடம் துரியோதனன் புகார் கூறியிருந்ததால், அதன் உண்மை தன்மையைக்  கண்டறிய பீஷ்மர் ஒருசமயம் குருகுலத்திற்கு வந்திருந்தார்).  

அப்போது, ஒருநாள் காலையில் நீராடுவதற்காக குருகுலத்தில் இருந்த துரோணரும், நூற்றி ஐந்து மாணவர்களும், இவர்களுடன் பீஷ்மரும் சேர்ந்து ஆற்றை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.  செல்லும் வழியில்  ஒரு மரத்தடியில் சற்று  இளைப்பாறுவதற்காக துரோணரும், அவருடன் வந்த எல்லா மாணவர்களும் அமர்ந்தார்கள்.  அப்போது துரோணர், எண்ணெய் கிண்ணத்தை வீட்டிலிருந்து எடுத்துவரச் சொல்லி அர்ஜுனனைத் திருப்பி அனுப்பினார்.  

அர்ஜுனன் சென்ற பிறகு, துரோணர் மாணவர்களுக்குப் புதியதாக ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தார். மனதை ஒருநிலைப்படுத்தி, இந்தப் புதிய  மந்திரத்தை  மனதிற்குள் சொல்லியபடி மரத்தில் அம்பு விட்டால், அந்த அம்பு மரத்தில் உள்ள எல்லா இலைகளையும் தைத்து விடும் என்று கூறினார்.  அதன் பின்னர் புதிய மந்திரத்தின் செய்முறையைக் கற்றுக் கொடுத்தார்.

துரியோதனனும் மற்றும் உள்ள அனைவரும், அந்த மந்திரத்தை ஒரு முறைக்குப் பலமுறைப் படித்தும், தரையில் எழுதிப்பார்த்தும் மனப்பாடம் செய்தார்கள்.  பிறகு அதன் செய்முறையைப் பலமுறை பயிற்சி செய்தும்  மகிழ்ந்தார்கள்.  பின்னர் அனைவரும் அங்கிருந்து கிளம்பி ஆற்றை நோக்கி சென்றார்கள்.  

அந்தச் சமயத்தில் அர்ஜுனன் கையில் எண்ணெய் கிண்ணத்தோடு திரும்பி வந்துகொண்டிருந்தான்.  வழியில், சற்று நேரத்திற்கு முன்பு குருவும் மாணவர்களும் அமர்ந்திருந்த மரத்தின் அருகில் வரும்போது, அதிலிருந்த  எல்லா இலைகளும் அம்பு தைத்தத் துளையோடு இருப்பதைப் பார்த்தான்.  அதைப் பார்த்ததும் அங்குப் புதிய பாடம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான்.  

கீழே மண்ணில் எழுதப்பட்டிருந்த மந்திரத்தைப் பார்த்ததும் உற்சாகமடைந்து, அதைப் படித்து நன்கு மனப்பாடம் செய்து கொண்டான்.  பின்னர் ஒரு அம்பை எடுத்து மரத்தை நோக்கி விட்டான்.  அந்த அம்பு மரத்தில் உள்ள நிறைய இலைகளைத் துளைத்து செல்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான்.  அதையே மீண்டும் மீண்டும் செய்து பார்த்து மனதில் நன்கு பதிய வைத்துக் கொண்டான்.  பிறகு ஆற்றை நோக்கிச் சென்று அங்கிருந்த குருவிடம்  எண்ணெய் கிண்ணத்தைக் கொடுத்துவிட்டு, தன் சகோதரர்களுடன் சேர்ந்து ஆற்று நீரில் ஆனந்தமாக நீராடினான்.

அனைவரும் நீராடிவிட்டு திரும்பும் வழியில் துரோணர் வேறொரு மரத்தடியில் மாணவர்களை அழைத்தார்.  ஆற்றுக்குப் போகும்போது தான் கற்றுத்தந்த பாடத்திற்கும், பயிற்சிக்கும் ஒரு தேர்வு (டெஸ்ட்) வைத்தார்.  அப்போது துரியோதனன் தான் கற்ற மந்திரத்தை மறந்துவிட்டு பயிற்சியைச் சரியாக செய்ய முடியாமல் தவித்தான். ஆனால் அர்ஜுனன் அந்தச் சோதனையில் மிகச் சிறப்பாகச் செய்தான்.  இதைக் கண்ட அனைவரும் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர்.  

துரோணரின் அணுகுமுறையைக் கவனித்துக் கொண்டிருந்த பீஷ்மருக்கும் இது மிகுந்த ஆச்சரியம் அளித்தது.  அதனால் அவர் அர்ஜுனனிடம், ‘இந்தப் பாடம் நடத்தும்போது அருகில் இல்லாத நீ எப்படி இவ்வளவு சரியாகச் செய்தாய்’ என்று கேட்டார்.

அப்போது அர்ஜுனன் தான் எண்ணெய் கிண்ணத்துடன் நடந்து வரும்போது வழியில் பார்த்தவற்றையும், அதிலிருந்து தான் கற்றுக் கொண்டதையும்  பீஷ்மரிடம் முழுவதுமாகக் கூறினான்.  இதைக் கேட்டு பீஷ்மர் வியந்து நின்றார்.  துரோணர் பீஷ்மரைப் பார்த்து, “நான் எனக்கு தெரிந்த வித்தைகளை அனைவருக்கும் சமமாகத்தான் கற்றுக்கொடுக்கிறேன்.  ஆனால், அர்ஜுனன் அதையும் கடந்த உள்ளுணர்வோடு, ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும்  கவனமாகக் கற்றுக் கொள்கிறான்” என்றார்.

அதாவது கற்றுக்கொடுப்பதைப் புரிந்துக் கொள்வதும், அதில் தேர்ச்சி பெறுவதும் பயிற்சியைப் பொறுத்து அமைவது.  ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒளிந்திருக்கும் பாடத்தை உணர்ந்து கற்றுக்கொண்டே இருப்பதுதான் உயர்ந்த அனுபவங்களைப் பெறுவதற்கான சிறந்த வழி  என்பதை இந்தக் கதை சிறப்பாக விளக்குகிறது.

உறக்கத்திலும் விழிப்பு:

வாழ்க்கை நமக்கு தொடர்ந்து பாடம் நடத்திக்கொண்டே இருக்கிறது.  இதை உணர்ந்து, நம்மை நாம் எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது நிலை தீர்மானிக்கப் படுகிறது.

“உலகம் ஒரு பள்ளிக்கூடம், பாடம் கற்க தயங்காதே”.  என்று எப்போதோ கேட்ட ஒரு பாடல் வரி நினைவுக்கு வருகிறது.  உலகம் சொல்லும் பாடம் புலன்களுக்குப் புலப்படுவது மட்டுமல்ல, எப்போதும் விழிப்பு நிலையில் உள்ள மனதால் உணரப்படுவதும் ஆகும்.  எதையும் ஆராய்ந்து உள்வாங்குவதே முழுமையான  கற்றல் தன்மையாகும்.  இது வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் ஆக்கபூர்வமான பயிற்சியாகும். 

கற்றோர் சிறப்பு:

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு 

காமுறுவர் கற்றறிந் தார்.

தான் கற்ற அறிவு தமது மகிழ்ச்சிக்கும், உலகத்தார் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருப்பதைக் கண்டு, அந்தக் கல்வியையே மேலும்மேலும் கற்க விரும்புபவர்களே கற்று அறிந்த சான்றோர் ஆவார் என்று உலகப் பொதுமறை கூறுகிறது. 

ஆற்றில் பெய்த தூய்மையான மழைநீர் நன்னீராகப் பெருகிஓடி உலகத்து உயிர்களுக்கு பலனளிப்பது போல, நன்மக்கள் கற்கும் கல்வியும் உலகத்து உயிர்களுக்கு எல்லாம் பயன்படும் வகையில் இருக்கும்.

# நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *