அடுத்தவர் அழகை அளப்பவரும்,
அவர்தம் முகத்தை அறிந்திடவே
அரிய வாய்ப்பைத் தந்தருளும்
அற்புதப் படைப்பே கண்ணாடி.
வளரும் பருவத்தின் மாறுதலைத்
தெரியும் உருவத்தில் காட்டிவிட்டு,
சலனம் சற்றும் காட்டாமல்
சகாயம் செய்யும் கண்ணாடி.
நிலையற்ற பிம்பம் கண்டாலும்,
நிஜமென நினைத்துக் கொண்டாடி,
நித்தம் நிற்கின்ற மடமைக்கு
நிலையான சாட்சியம் கண்ணாடி.
சற்று முன் தெரிந்ததும் நீயில்லை!
நகர்ந்தபின் இருப்பதும் நீயில்லை!
இந்த நொடி வாய்ப்பே நிதர்சனம்!
நிதானமாகச் சொன்னது கண்ணாடி.
இடமும் வலமும் மாற்றினாலும்,
இரண்டே பரிமாணம் என்றாலும்,
தனது பிம்பம் என்றவுடன்
இன்முகம் காட்டிச் சிரிக்கின்றார்.
மற்றவர் முன்னே வந்தவுடன்
முழு பரிமாண முகம்பார்த்தும்
புன்னகை செய்ய மறுக்கின்றார்!
உண்மை சொன்னது கண்ணாடி.
ஒப்பனையில் ஓடும் புன்னகையை
ஒப்புதலோடு ஒட்டிக்கொண்டால்
அடுத்த பரிமாணமும் அழகாகும்!
இரகசியம் சொன்னது கண்ணாடி.
உள்ளதை உள்ளபடிக் காட்டும்
மாயக் கதைகளின் கண்ணாடி.
உள்ளத்தை உள்ளபடிக் காட்டியதோ
மனதின் மந்திரக் கண்ணாடி!