வளர்ச்சி! வகுப்பறையிலா, வலைதளத்திலா? Valarchchi, Vagupparaiyilaa,Valaithalaththilaa? Growth By Classroom or Network

அட்சயப்பாத்திரம்:

கல்வி, மருத்துவம், காவல், பாதுகாப்பு, நீதி  போன்ற துறைகள், தொழில் என்ற நிலையிலிருந்து சேவை என்ற உன்னத நிலைக்கு உயர்ந்து நிற்பவை.  மிகவும் கண்ணியமாக மதிக்கத் தக்க இந்தத் துறைகள், ஒரு நாட்டின் வளர்ச்சியையும், வல்லமையையும்  உலகஅரங்கில் உயர்த்தும் தூண்கள்.  

இவற்றுள் கல்வி என்பது ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையிலும், குழந்தைப் பருவத்திலேயே ஒன்றி வளர்ந்து நினைவுகளோடு பின்னி பிணைந்து விடுகிறது.  

மற்றத் துறைகளை நேரடியாக அணுகாமல் கூட ஒருவர் இருந்துவிடலாம். ஆனால் கல்வி என்பது அனைவரும் பெறவேண்டிய செல்வமாகும். மேலும், கல்வி என்பது அனைத்துத் துறைகளுக்கும் அடிப்படையாகவும் விளங்குகிறது. 

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி வகுப்பறையில் தொடங்கி, அறிவுக்கடலினை அறிமுகப் படுத்துகிறது.  இங்கு நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் பசுமை நிறைந்த நினைவுகளாகப் பதிந்து வாழ்நாள் முழுவதும் பல வண்ணங்களைக் காட்டுகின்றன.  

கல்விக்கூடம் என்பது சிறந்த அனுபவங்களை அள்ளித்  தருகின்ற அறிவுக்களஞ்சியம்.  கல்வி என்பது அறியாமை எனும் பிணியைப் போக்கி, அறிவூட்டும் அட்சயப் பாத்திரம்.   

இவை முறையாகச் செயல்படும் நிலையில் பாடத்திட்டம், மதிப்பெண்கள் என்ற கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டும் இவற்றின் மதிப்பு உயர்ந்து நிற்கிறது.  மேலும் இவை, ஒவ்வொரு மனிதனின்  அடிப்படையான எண்ணங்களுக்கும் தூண்டுகோலாக இயங்கி அவனது வாழ்க்கையை வரமாக வழங்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. 

துவக்கம்:

நாட்டின் வருங்காலத்தை வகுப்பறையில் வளர்க்கும் பொறுப்பு மிக்க ஆசிரியர்கள், தங்களது அணுகுமுறையால் மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அதையே அவர்களின் முன்னேற்றத்திற்குத் துவக்கமாக மாற்றக் கூடியவர்கள். 

 

கல்விக்கூடங்கள் என்பவை மாணவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கம், மனஉறுதி, நல்லபண்புகள், போன்றவற்றைப் பயிற்றுவிக்கும்  பயிற்சிக்  கூடங்கள்.  சக மனிதரை மதிப்பதற்கும், நட்பாகப் பழகுவதற்கும் வாய்ப்புகள் துவங்குமிடம்.  

மனிதநேயமே மகத்தான கல்வி என்று உணர்த்துவதற்கும் பயிற்சி அளிப்பதற்கும் பள்ளிகள்தான் சிறந்த இடம்.  தன்னுடைய  மாணவர்கள் தன்னைவிட உயர வேண்டும் என்ற எண்ணத்துடன் பாடுபடும் ஆசிரியர் மாணவர்களின் நலனை மட்டுமே குறிக்கோளாகக்  கொண்டிருப்பார்.

ஒரு நல்ல ஆசிரியரின் அன்பும், கண்டிப்பும் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஏணியாக அமைந்து வாழ்க்கையை உயர்த்துகின்றன.  அவ்வாறு உண்மையாகப் பாடுபடும் மதிப்பு மிக்க ஆசிரியர் மாணவர்களின் மனதில் என்றென்றும் உயர்ந்து இருப்பார்.  

அறிவுச்சுடர்:

இன்றைய காலக்கட்டத்தில், மாணவர்களின் மதிப்பெண்கள் என்பது அவர்களுக்கு மட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும், பெற்றோர்களுக்கும் அடையாளமாக ஆகிவிட்டது. 

இவ்வாறு மதிப்பெண்களை முக்கியமாகக் கருதும் கல்விமுறையால்  வாழ்க்கைக்குத் தேவையான குணங்களும்,  நடைமுறைக்குத் தேவையான பயிற்சிகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.  

மதிப்பெண் என்பது உயர் கல்விக்குத் தேவையான நுழைவுச்சீட்டு என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு அந்தக் கல்வியினால் ஏற்படும்  உயர்ந்த அனுபவம் என்பது மாணவர்களின் வாழ்க்கைக்குத்  தேவையான தகுதிச்சீட்டு என்பதும் உண்மையாகும்.  

கல்விஅறிவு, என்பது கையில் உள்ள விளக்கு.  நல்லபண்புகள், என்பது வாழ்நாள் முழுவதும் வெளிச்சம் காட்டும்  தீபஒளி.  எனவே, இத்தகைய பண்பும், கல்வியும் நிறைந்த சமுதாயத்தை வளர்க்கும் ஆசிரியர்கள் என்றும் நம் வணக்கத்திற்கு உரியவர்கள்.

மாண்புமிகு:

மாணவர்களால் அன்புடன் மதிக்கப்பட்ட, திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்தவர். இந்த உயர்வை பெருமையோடு  நினைவு கொள்ளும் வகையில் செப்டம்பர் 5ஆம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.  

மக்கள் அனைவரும் மதிக்கும் ஜனாதிபதியாக இருந்த திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள், மாணவர்களின் மனதில் நிறைந்ததைக் கொண்டாட, அவர் பிறந்தநாளை (அக்டோபர் 15) உலக மாணவர் தினமாக நாம்  நினைவுகொள்கிறோம்.  

இவர்கள், முதல் குடிமகன் எனும் தகுதியை வளர்க்கும் இடமும், முதல் குடிமகனை ஈர்க்கும் இடமும், கல்விக்கூடங்கள்தான் என நமக்கு நிருபித்தவர்கள்.  “ஒரு நாட்டின் முன்னேற்றங்கள் வகுப்பறையில் தான் துவங்குகின்றன” என்று அவர்கள் உணர்ந்ததை, உலகிற்கும் உணர்த்திய மாமனிதர்கள்.  

சமுதாயத்தின் ஆணிவேர்:

ஆசிரியர், குற்றம் களைபவர் மட்டுமல்ல.  அந்த இடத்தில் நல்ல சிந்தனைகளை விதைப்பவரும் அவரே.  ஒரு செயலுக்கு மாறுபட்ட பார்வைகளைக் காட்டுபவர். 

பாடத்திட்டம் என்பது பாடத்திற்கான திட்டம்.  அதில் ஆசிரியரின் திட்டம் என்பது மாணவர்களின் மனநிலையை உயர்த்துவதாக இருக்கும்போது அந்தச் சூழல் சிறப்படைகிறது.  

இளம் வயதிலேயே ஒருவனை ஒழுக்கத்தோடும், நல்ல அறிவோடும் வாழ பழக்கிவிட்டால் அந்தப் பழக்கமே பசுமரத்தாணிபோல மனதில் பதிந்துவிடும்.  இளமையில் கல் என்பது கல்வி மட்டுமல்ல  நல்ல பழக்கங்களும்தான். 

“விளைபொருளின் தரம்” என்பது மக்களின் ஆரோக்கியம் சார்ந்தது.  “மாணவர்களின் தரம் என்பது நாட்டின் நலன்” சார்ந்தது.  நாளைய மன்னர்களாம்  இன்றைய குழந்தைகளைச் சிறந்த மனிதர்களாக உயர்த்தி, தரமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு உழைக்கும் பொறுப்புள்ள ஆசிரியர்கள் நாட்டின் ஆணிவேர் போன்றவர்கள். 

முழுநிலவு:

விருது பெற்ற நல்லாசிரியர்கள் எண்ணற்றோர் இருக்கிறார்கள்.  இன்னும் விருதுகள் பெறப்போகும் நல்ல ஆசிரியர்களும் எண்ணற்றோர் இருப்பார்கள்.  இத்தகைய விருதுகளுக்கு அப்பாற்பட்ட, ‘சிறப்புக் குழந்தைகளுக்கான’ சிறந்த ஆசிரியர்களின் சேவையும், உழைப்பும், வெளியே தெரியாத தியாகமும் அவர்களை வாழும் தெரசாக்களாக   உயர்த்துகின்றன.  

தனித்துவமான ஒவ்வொரு குழந்தையின் செயலையும் கவனித்துக் கவனமாகப்  பாராட்டுவதோடு, குழந்தைகள் முன்னேற்றத்தையே தங்கள் மகிழ்ச்சியாகக் கருதும் அவர்களுடைய அன்புக்கு இணையான ஒரு விருதும்  இல்லை.  இத்தகைய தாய்மையின் அன்போடு பழகும் சிறந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மனதில் என்றும் குளிர்ச்சி தரும் முழுநிலவு போன்றவர்கள்.

வலைதளம்:

இன்றைய காலகட்டத்தில் பாடமும், அதன் விளக்கமும், அதற்கு மேற்பட்ட விவரங்களும் வலைதளத்திலேயே ஒரு மாணவனுக்குக்  கிடைத்துவிடுகிறது.  எந்தத் தகவலையும் பல்வேறு கோணத்தில், முழுமையாக, உடனடியாகத் தெரிந்து கொள்ள உதவும் வலைதளம் ஒரு வரம்.  

கற்பகத் தரு:

ஒருவன், ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குக் காட்டு வழியாகப் பயணம் செய்தான்.  அப்போது களைப்பின் மிகுதியால் ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்து ஓய்வெடுத்தான்.  அப்போது, “பசியாற உணவு இருந்தால் நன்றாக இருக்குமே” என நினைத்தான்.  

உடனே அவன் முன்னே அறுசுவை உணவு அவனுக்காக வந்தது.  நினைத்தவுடன் பலன் கொடுத்த அந்த மரத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்த அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு திருப்தியாக உணவு உண்ட களைப்பில் உறங்கி விட்டான்.  

நெடுநேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது நன்கு இருட்டிவிட்டது.  இரவில், காட்டில், தனியாக, இருப்பதை உணர்ந்த அவன் மிகவும் பயந்து விட்டான்.  அதனால் “இப்போது காட்டு விலங்கு ஏதாவது வந்தால் என்ன செய்வது” என்று நினைத்தான். 

உடனே அவன் முன்னே சிங்கம் வந்து நின்றது.  கேட்பதெல்லாம் தருகின்ற மரத்திடம் என்ன கேட்க வேண்டும் என்ற விழிப்புநிலை இல்லாததால் சிங்கத்திடம் மாட்டிக்கொண்டான்.  

அறிவியல் முன்னேற்றம்:

இன்றைய குழந்தைகள், தகவலை அள்ளித்தரும் கற்பகத் தருவை கையடக்கமாக வைத்திருக்கிறார்கள்.  இது காலத்தின் கட்டாயம் என்பதையும் கடந்து, நடைமுறையில் மிகவும் பயனளிக்கும் அறிவியல் வசதி.  உலகத்தை உள்ளங்கையில் கொண்டு வந்த தொழிற்நுட்ப வளர்ச்சி.  

இந்த அற்புதமான வாய்ப்பை மிகச் சரியாக, நேர்மையாக, வரைமுறையோடு பயன்படுத்த ஒரு நெறிபடுத்துதல் அவசியம். அந்த நிதானமும், தெளிவும் மாணவர்கள் பெறுவதற்கான வழிகாட்டுதல், வகுப்பறையிலும்  நிச்சயம் தேவைப்படுகிறது.   

கல்வியில் தன்னுடைய விரிவான பார்வையை வெளிப்படுத்தும் ஆசிரியர், மாணவர்களுடன் குழுவாக விவாதிக்கவும், அது தொடர்பான வலைதளத் தேடல்களை ஊக்கப்படுத்தவும், வகுப்பறையில் மட்டுமே இயலும். ஆசிரியர்களின் இந்தக் கூடுதல் பொறுப்பினால் மாணவர்களின் வளர்ச்சி என்பது வகுப்பறையில் தொடங்கி, வலைதளத்திலும் விரிவடையும் வாய்ப்பு ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *