திரைப்படங்கள் நன்மைகள் செய்கின்றனவா? Films Nanmaigal Seikindranavaa? Movies Are Doing Good?

பொழுதுபோக்கு:

ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம், அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொழுதுபோக்கைப் பற்றி தனித்தனியாகக்  கட்டுரை எழுதும்படி  சொல்லியிருந்தார்.  

மாணவர்களும் புத்தகம் வாசிப்பு, ஓவியம் வரைவது, தோட்டக்கலை என்று பல்வேறு வகையில் எழுதி இருந்தார்கள்.  ஆனால், ஒரு கட்டுரை மட்டும் வகுப்பையே மிகவும் கலகலப்பாக மாற்றியது,  ஏனென்றால்  அது திரைப்படம் பார்ப்பது என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது.  

உண்மையில் பார்த்தால், திரைப்படங்கள்தான் பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்காக அமைந்துள்ளது எனத் தெரிகிறது.   ஒரு திரைப்படம்  ஒரே நேரத்தில் பெருமளவு மக்களைச் சென்றடையும் வீச்சும், மக்களை  ஒரே குழுவாக ஒன்றிணைக்கும்  சக்தியும் ஒருங்கே கொண்டுள்ளது.  இத்தனை ஆற்றலைத் தன் வசம் கொண்டுள்ள திரைப்படங்கள், சமுதாய வளர்ச்சியில் ஆற்றியப் பணிகள்  மிக உயர்வானவை. 

உலகத்தின் சன்னல்:

பொதுவாகத் திரைப்படங்களில், எல்லாம் கலந்து இருந்தாலும், அவற்றுள் அதிகமாகக் கொடுக்கப்பட்ட நன்மைகள் ஏராளம்.  எளிய மக்களுக்குத் தங்கள் ஊரைக்கடந்த, வேற்றுமொழி, வெளிநாடுகளின் அமைப்பு, ஊர்திகளின் வகைகள், சமுதாயநிலை போன்றவைகளைத் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக இருந்தது.  

பல்வேறு குடும்ப அமைப்புகள், பணத்தின் மதிப்பு, மக்களின் மனோநிலை, வாழ்க்கைத்தரம், உடை, அலங்காரம், கலாச்சாரம் போன்ற  எல்லாக் கோணங்களிலும் ஒரு  அடிப்படையான  அறிமுகமும், விளக்கமும்  கிடைத்தன. 

அக்கறை:

இதிகாசக்  கதைகளையும், இலக்கியங்களையும் எளிமையாக்கி, சுவைபடக் கூறியதில் கலைஞர்களின் திறமை வெகுவாக வெளிப்பட்டது.  கப்பலோட்டியத் தமிழனையும், கட்டபொம்மனையும், கண்முன்னே  காட்டி, மக்களின் மனதில்   “சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்”  என்று சுரீர் என உரைக்க  வைத்தார்கள். 

பெரும்பாலான படங்களில் நல்லவனுக்கான வரைமுறைகளை வகுத்துக் கூறினார்கள்.  குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் நமக்கு நல்லது கூறுவது போல, வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகளை அக்கறையோடு கூறினார்கள். 

கல்வியின் சிறப்பினால் பண்பு உயரவேண்டும் என உணர்த்தினார்கள்.  குழந்தைகளும் படம் பார்க்க வருவார்கள் என்று அவர்களுக்கான பரிசுகளாக நல்ல  கருத்துகளை நயமாக மறக்காமல் கூறினார்கள். 

செவிக்கின்பம்:

திரைக்கதைகளுக்குச் சற்றும் சளைக்காமல் பாடல்களும் தரமானவையாக இருந்தன. “பாட்டாலே புத்தி சொன்னார், பாட்டாலே பக்தி சொன்னார்” என்று, அவர்களும்  அதை வழிமொழிந்தார்கள்.  

மனிதன் தன்னிலையில் உயர்ந்து மக்களுக்காக வாழ நினைத்தால், “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…, என்ற பாடல்  அதற்கு உள்ள வாய்ப்புகளை வரிசைப்படுத்தி வழிகாட்டும்.  

வாழ்க்கைச் சூழலில் சிக்கி குழம்பியவர்களை, மயக்கமா? கலக்கமா? என ஒரு நண்பனைப் போல் கேட்டு, “உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப்  பார்த்து நிம்மதி நாடு” என்று ஆறுதல் அளிக்கும்.  

வாழ்க்கையின் அடிப்படையே அனுசரித்து நடப்பதில்தான்  உள்ளது என்பதை, “ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது, காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை” என்று மனதைப்  பக்குவப்படுத்தும்.  

எந்த நிலையிலும் நம்மைப் பற்றி நமக்குப் புரிதல் வேண்டும் என்பதையும், அத்தகைய சுயவிசாரணையைச் சிறுவர்களும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் “உன்னையறிந்தால்…, என்ற பாடல் விளக்குகிறது. 

இத்தகைய சிறந்த கருத்துள்ள  பாடல்கள், பலரது வாழ்க்கையில் ஆறுதலாகவும், சில மாற்றங்களை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்துவதாகவும், நன்னெறிகளை அறிவுறுத்துவதாகவும் இருக்கின்றன.

பாடல்களின் கருத்துகளும் அதன் சிறப்புகளும் எளிமையாக நம்மை வந்து சேர்வதால், அவை ஏற்படுத்திய மாற்றங்களைச் சொல்ல, ஒருநாள் போதுமா?  

அடர்த்தியான, அழுத்தமான கதைகளும், உறவுகளின் உன்னதமும், நாகரிகமான நகைச்சுவையும், பாடல்களின் செறிவும், எளிய மக்களின் நடைமுறைகளை ஒருபடி உயர்த்தியது எனலாம்.  இதன்  பிரதி பலனாக  திரைப்படங்களும் தன்னிலையில் மேலும் உயர்ந்ததும்  உண்மைதான்.

புத்துணர்ச்சி:

திரைப்படங்களின்  நகைச்சுவை, சிறந்த கருத்துகளை எளிமையாக மனதில் பதிய வைத்து, மகிழ்ச்சியை அளித்தன.   இறுக்கமாக இருந்த மக்களையும், தரமான நகைச்சுவையின் மூலம் மனதின் சோர்வு நீக்கி, சிந்தனைகளை  விரிவாக்கம் செய்தன.  

ஒரு கூட்டுக் குடும்பத்தில்  பாமா விஜயம் ஏற்படுத்திய கலகலப்பும், தாடி, மீசையை மட்டுமே முக்கியமாக வைத்து செய்யப்பட்ட  காதலிக்க நேரமில்லை, தில்லுமுல்லு போன்ற ரகளையான நகைச்சுவை படங்களும், இன்றும்  நமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.  

இதற்கு மேலாக,  “நீயே உனக்கு என்றும்  நிகரானவன்…”, “ஜம்புலிங்கமே ஜடாதரா…” போன்ற  சில பாடல்களின் காட்சி அமைப்பும், அருமையான நடிப்பும் பாடல்களிலும் வெளிப்பட்டு, நம்மை உளம் மகிழச் செய்கின்றன. 

படமா, பாடமா? 

இத்தகைய நல்ல படங்கள் மக்களிடையே தென்றல் போல  இதமாக ஊடுருவி மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தின. உறவுகளிடம் அனுசரித்துப் போவதற்கும், அன்பை நாகரிகமாக வெளிப்படுத்துவதற்கும், நேர்த்தியான படங்கள் உதவியாக இருந்தன. உறவுகளின் சில நுணுக்கமான உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் உதவின.  

எப்போதும், திரைப்படங்கள் சமூகத்தில் இருந்துதான் கதைகளை எடுக்கின்றன.  தோட்டத்துக் காய்கனிகளில் பூச்சிகளை நீக்கிவிட்டுப் பக்குவமாய்ச் சமைத்தப் படங்கள், சுவையானதாகவும், ஆரோக்கியம் ஆனதாகவும் இருந்தன.  இதனால் சமூகமும்  உயர்ந்தது, சமூகத்தால் திரைப்படங்களும் உயர்ந்தன.

காலக்கண்ணாடி:

ஓல்ட் ஈஸ் கோல்ட் என்று எல்லாவற்றையும் ஒரே கம்பளத்தில்  விரிக்காமல்,  மிகைநாடிக் கொள்ளப்பட்டவை, மக்கள் நலன் பற்றிய கருத்துகளே, என்பதால் இன்றும் பழையப்படங்கள் பெரிதும் பாராட்டப் படுகின்றன. 

அதே நேரத்தில், காலக் கண்ணாடியாக விளங்கும் படங்கள் இன்றைய தலைமுறைகளை உயர்த்திப் பிடிக்கவேண்டுமே, என்ற தவிப்பும் ஏற்படுகிறது.  மக்களின் சுயமரியாதையை  உயர்த்தும் நல்ல படங்களே இன்றைய இளைஞர்களிடையே நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

திரைப்படங்களின் ஆற்றல் மிக அதிகம் என்பதால் அதன் பொறுப்பும் மிக அதிகம் ஆகிறது.  காண்ட்ராக்டர் நேசமணி குழுவினர் தூக்கியக் கடிகாரம் போல, பல்வேறு கலைஞர்கள் ஒன்று சேர்ந்து சமூகத்தை உயர தூக்குகிறார்கள்.  அதைச் சற்று கூடுதலான கவனத்துடன் செய்தால்தான் சமூகமும் பாதுகாக்கப்படும், பாரம்பரியம் மிக்க  கலையும் மதிக்கப்படும்.

பொறுப்பு, துறப்பு:

ஒற்றைவரி எச்சரிக்கையால் ஒரு சில பலன்கள் இருக்குமெனில், அதன் பின்னணியில் திரை முழுவதும் காட்டப்படும் காட்சிகளின் விளைவுகளை அறியாதவர்கள் அல்ல.  

தீய பழக்கங்கள் இருப்பவர்கள் கெட்டவர்கள் அல்ல, என்று காட்டுவதைவிட, அத்தகைய நல்லவர்கள் நல்ல பழக்கங்களோடு இருப்பது மேலும் உயர்வு என்று சொல்லலாமே.  அதனால் ஏற்படும் நன்மைகளை புதிய வழியில் காட்டலாமே. 

வளர்ந்துவரும் இளைய சமுதாயத்திற்கு  வாழ்க்கைக்குத் தேவையான நல்ல கருத்துகளை ஊட்டினால்தான் அது பெரிய சமுதாயப் பணியாக இருக்கும். “தூங்காதே தம்பி தூங்காதே” என்று பாடி விழிப்புணர்வு தரும் சக்தி திரைப்படங்களுக்கே உண்டு.  

மாண்பு:

இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் சங்கமிக்கும் இந்தத் துறையில், கலைஞர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும், கர்த்தாக்களும்  உள்ளனர்  என்பதால் அவர்களுடைய பணி மிகச் சிறப்பானது.   

வெள்ளித்தட்டில் பரிமாறும் உணவுகள் புதுமையானதாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான்.  ஆனால் அதைவிட ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்பதே மக்களின் நியாமான எதிர்பார்ப்பு.

சமுதாயத்திற்கு நேரிடையாக  வழி காட்டும்  ஆற்றலைக்  கொண்ட திரைப்படங்கள் சமுதாயத்திற்குச் செய்த நன்மைகள் மிகமிக அதிகம்.  இன்றும், அந்த வாய்ப்பைப்  பொறுப்பாகக் கருதி, நல்லமுறையில் பயன்படுத்துவது இன்றைய காலத்தின் தேவை. 

இதுவே, கண்ணுக்கும், கருத்துக்கும், செவிக்கும், மனதிற்கும் ஏற்ற  தரமான சமுதாயச்  சிந்தனைகளை வரவேற்கும்  மக்களின் கருத்து. 

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *