பொதுவான பார்வை:
உயர்ந்த குறிக்கோளும், அதை நோக்கிய உழைப்பும்தான் ஒருவரை வாழ்க்கையில் முன்னேற்றுகிறது. அப்படியானால் அதற்கான கனவுகளும், எதிர்பார்ப்புகளும் நமக்கு வலிமையைத்தானே தரவேண்டும். மாறாக சில சமயங்களில் வலியைத் தருவது ஏன்?
பொதுவாக அனைவரும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழவேண்டும் என்று கூறுவதும் எதனால்? எதிர்பார்ப்புகளும் அதன் விளைவுகளும்: நமது பார்வையில் இன்றைய சிந்தனைகள்.
பொறுப்பு:
அடிப்படை தேவைகள்கூட ஆடம்பரம் என்று கருதியக் காலத்தில் வளர்ந்தவர்கள் மனவுறுதியோடு, ஏமாற்றங்களையும் மாற்றங்களாக்கி, இதையெல்லாம் கடந்துதான் வாழ்க்கை என்கிற உணர்வை மிக நன்றாக தெரிந்து வைத்திருந்தார்கள்.
பிள்ளைகள் பொறுப்போடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பெற்றோர்களுக்கு எதிர்பார்ப்பாய் இருந்தது. இதனால் எதையும் கவனமாகச் செய்ய வேண்டும் என்பதே பிள்ளைகளுக்குப் பெரிய சவாலாக இருந்தது.
கவனம்:
இன்றைய குழந்தைகள் புதிய சவால்களைச் சந்திக்கிறார்கள். கவனச்சிதறல் ஏற்படுத்தும் பலவகையான சூழல்கள், அவர்களைச் சூழ்ந்து இருக்கின்றன. அதில் உள்ள ஆபத்தைத் தெரிந்து, எச்சரிக்கையாக இருக்க குழந்தைகள் பழகுவதற்குள், அது அவர்களை ஆக்கிரமித்து விடுகிறது.
இதிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர்களுக்கும் மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே நாம் அனைவரும் விரும்புகிறோம் என்பதால் சில கருத்துகளை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவே இந்தப் பகிர்வு. இது யாருக்கும் அறிவுரை அல்ல, இது ஒரு தோழியின் பார்வையிலிருந்து, நமக்காக.
வலிகள்:
தளிர்நடைபோடும் குழந்தை தடுமாறினால், தாவி வந்து தரப்படும் பாதுகாப்பு உணர்வுதான் குழந்தைகளுக்கு வளர்ந்தாலும் தேவைப்படுகிறது. அந்தப் பாதுகாப்பான உணர்வைத் தகர்க்கும் முதல் ஏவுகணை பொருத்தமற்ற, அதிகப்படியான எதிர்பார்ப்பு.
ஆடம்பரங்களைக் கூட அத்தியாவசியம் என்று கருதும் மனநிலையைச் சற்று ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டிய சூழல் இது. இந்த நேரங்களில் அவர்கள் தனிமையை உணராதபடி அமைத்துக்கொள்வதில் குடும்பத்தினரின் பொறுப்பு அதிகம் உள்ளது.
பிள்ளைகளின் தலையில் ஏற்றப்படும் அதிகப்படியான எதிர்பார்ப்பு அவர்களை மனஅழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. இதை எதிர்கொள்ள முடியாதப் பிள்ளைகள் பெற்றோர்களைத் தவிர்க்க வழி தேடுகிறார்கள். இந்த நிலையில் இவர்களை எப்படித்தான் வழிநடத்துவது?
வழிகள்:
குழந்தைகளோடு கலந்து உரையாடும்போது, அவர்களை மற்றவர்களோடு ஒப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது முக்கியமானதாகும். உயரப்பறக்கும் ராஜாளி மட்டுமே பறவை அல்ல மயிலும், கிளியும், கோழியும், குருவியும் அழகான பறவைகள் தான் என்று மறக்க கூடாது.
கிளியிடம் பேசும்போது, “மயில் தோகைதான் அழகு. உனக்கும் அதுபோல் தோகை வளர முயற்சி செய்” என்று கூறினால், கிளியின் மனநிலையில் எப்படி இருக்குமோ, அந்த மனநிலையில்தான் பிள்ளைகளும் சில பொருத்தமற்ற எதிர்பார்ப்புகளைச் சந்திக்கிறார்கள்.
மாறுபட்ட, தனித்துவமான தன்மைகள், திறமைகள் இருக்கும் குழந்தைகள் மற்றவர்களின் வழக்கமான எதிர்பார்ப்புகளினால் மேலும் குழப்பமடைகிறார்கள். இதனால்தான் தங்களைப் புரிந்துகொள்ளாத உறவுகளிடமிருந்து விலகுகிறார்கள்.
மேன்மை (excellency) என்பது தன்னுடையத் திறமையினால் தன்னிலையில் உயர்வது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு, அதை உணர்ந்து சிறப்பாகப் பயன்படுத்துவதுதான் அழகு.
ஆனால் இதை உணராமல் தன் வீடு, உறவு, நட்பு, சமூகம் என அனைவரின் மாறுபட்ட எதிர்பார்ப்புகளும் தன்னை நோக்கி பாய்வதைத் தாங்கமுடியாமல் தவிக்கும் குழந்தையை எப்படி ஆதரிப்பது?
நம்பிக்கை:
பனைமரம் ஏறுகின்றவரைக் கீழே நிற்பவர் தன் கை எட்டும் வரைதான் பிடிக்க முடியும். அதற்கு மேல் ஏறுவது அவர் விருப்பம், என்று விலக முடியாமல் கையைத் தூக்கியபடியே பதட்டத்துடன் கீழே நிற்கும் பெற்றோர்கள். இதுதான் இன்றைய பெரும்பாலான வீடுகளின் நிலைமையாக உள்ளது.
பட்டம் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கையில் உள்ள மெல்லிய நூல் இரண்டையும் தொடர்புப்படுத்துவது போல, பிள்ளைகளிடம் காட்டும் நிதானமான அன்பும், பொறுமையும், உறுதியான தொடர்பை ஏற்படுத்தும். அவர்களை நம்பி கொடுக்கப்படும் சின்ன சின்ன பொறுப்புகளின் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தலாம். அந்த முயற்சியே அவர்களின் மனவுறுதியை அதிகப்படுத்தும்.
பாதுகாப்பு:
வெளிப்பார்வைக்குக் கடுமையாகத் தெரியும் பிள்ளைகள்கூட, மனதின் நெகிழ்ச்சியை மறைக்க, தங்களை அவ்வாறு வெளிக் காட்டுகிறார்களோ என்று தோன்றுகிறது.
உணவிலும், உடையிலும், பொருட்களை வாங்கிக் கொடுப்பதிலும் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதைவிட, பிள்ளைகளின் அடிப்படையான உணர்வுகளைத் தெரிந்துகொள்வதிலும், அவர்களின் பேச்சைப் பொறுமையாகக் கவனிப்பதிலும், அன்பை வெளிப்படுத்தலாம்.
வெளிஉலக எதிர்பார்ப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, தோல்வியோ, வலியோ, ஏமாற்றமோ எதுவந்தாலும் பிள்ளைகளின் மனதில் அன்பை விதைத்து, நம்பிக்கையை வளர்க்கலாம்.
தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஈகோ இல்லாமல் பகிர்ந்து நேர்மறையான சிந்தனைகளை உண்டாக்கலாம். அவர்களுடைய விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடு விதிக்காமல், மிகப் பொறுமையாக விளைவுகளை விவாதிக்கலாம்.
எதுவாயினும் நம் குடும்பம் நமக்காக உள்ளது என்ற நம்பிக்கைதான் ஒழுக்கமான பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு.
தனித்தன்மை:
வருடம் முழுவதும் பலன் தருவது தென்னையின் அமைப்பு. தனக்கான பருவத்தில் மட்டும் பலன் தருவது மாமரத்தின் சிறப்பு. ஒரே வீட்டு பிள்ளைகளாக இருந்தாலும், ஒருவரோடு மற்றொருவரை ஒப்பிடமுடியாது.
ஒருவகையான தன்மை உள்ளவரிடம், மற்றொரு தன்மையை எதிர்பார்த்தால், தேவையற்ற மனப்பதட்டமே ஏற்படும். மேலும் தனிப்பட்ட திறமையும் குறைந்துவிடும். ஒவ்வொரு மனிதரும் ஒருவிதம் எனப் புரிந்துகொண்டு, அவரவர் தனித் திறமையில் முன்னேற்றம் காண்பது சிறப்பானது.
வலிமை:
ஒரு பேனாவின் குழலில் மை முழுமையாக இருந்தால் மட்டும் போதாது, அதன் பிடியும் அதனுடன் இறுக்கமாகப் பொருந்தியிருக்க வேண்டும். அப்போதுதான் தெளிவாக எழுதமுடியும்.
அதுபோல பிள்ளைகளுக்குக் கல்வியும் அறிவும் கொடுத்துவிட்டு, மனம்விட்டு பேசாமல் தனிமையில் விட்டுவிடுவது குடும்பத்தில் அவர்களுக்கு உள்ள பிடிமானத்தைத் தளர்த்திவிடும். இதனால், தெளிவாக எழுதமுடியாத பேனா போல பிள்ளைகளும் தெளிவில்லாமல் தங்களுக்குத் தோன்றியதைச் செய்கிறார்கள்.
குடும்பத்தோடு கலந்து பேசுவது உரத்தச் சிந்தனையாகச் செயல்பட்டு புதிய வழிகள் தோன்ற வழிவகுக்கும். இதனால் பெற்றோர்களின் நியாயமான தேவைகளைப் பிள்ளைகளும் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டாகும்.
பொருத்தமற்ற எதிர்பார்ப்புகளால் பிள்ளைகளின் மனதில் வலியை உண்டாக்காமல், அவர்களுடைய தனித் திறமையை ஊக்கப்படுத்தினால், அது மேலும் வளர்ந்து வலிமையாக வெளிப்படும்.
அதோடு சேர்ந்து, குடும்பத்தினரின் நம்பிக்கையும், அன்பும் கிடைத்துவிட்டால், அந்த மகிழ்ச்சியே அவர்களை பொறுப்பு உள்ளவர்களாக செயல்பட வைக்கும்.
# நன்றி.