உளியைத் தாங்கும் வலிமை:
நாம் போற்றும் பெரிய மனிதர்களுள் எவரும் பிறக்கும்போதே சிலை வைக்கும் அளவுக்குப் புகழ் பெற்றிருந்ததில்லை. அவர்கள் அனைவருமே வாழ்க்கை என்ற பயணத்தில் சோதனைகள் எனும் உளிகளால் அணுஅணுவாகச் செதுக்கப்பட்டு, அனுபவம் என்ற சிற்பியால் அழகாக வடிவமைக்கப்பட்டவர்கள்தான்.
செயலின் ஒழுக்கம்:
பெரிய சாதனைகள் என்பது சின்னசின்ன செயல்களாகச் செய்து சேர்க்கப்பட்டத் தொகுப்புகள்தான். எனவே, ஒவ்வொரு சிறிய செயலையும் அந்தச் செயலுக்கான விதிமுறை ஒழுங்கோடு நேர்மையாகச் செய்யவேண்டும். இவ்வாறு செயல்படும்போது சிறிய செயல்தானே என்று அலட்சியமாக இருந்தால், அது மற்ற வேலைகளையும் வீணாக்கிவிடும்.
பெரிய மலை தடுக்கி யாரும் கீழே விழுவதில்லை, சிறிய கல் தடுக்கிதான் விழுகிறார்கள். எனவே, எந்தவொரு சிறிய செயலானாலும் அதற்கான விதிமுறை ஒழுங்கோடு, கவனத்தோடும் பொறுப்போடும் செய்வதுதான் பெரிய சாதனையாக உயர்கிறது.
தொடர் செயல் ஒழுக்கமே திறமை:
எந்த நல்ல செயலாக இருந்தாலும் முறையாகத் தொடர்ந்து செயல்படுவதே நாளடைவில் அனுபவமாகி அதுவே திறமையாக வெளிப்படும். இத்தகைய திறமையே அனைவருக்கும் பாதுகாப்புத் தருவதாகவும் இருக்கும்.
2009இல் Chesley Sullen Berger என்ற விமானஓட்டி நியூயார்க் நோக்கி தன் விமானத்தைச் செலுத்தியபோது, அதன் என்ஜின்கள் திடிரென்று பழுதாகிவிட்டன. உடனே அவர் சமயோசிதமாகத் தன் விமானத்தை ஹட்சன் ஆற்றில் இறக்கி அனைத்துப் பயணிகளையும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் காப்பற்றினார்.
அத்தகைய ஆபத்தான நிலையிலும், நெருக்கடியான நேரத்திலும் உடனடியாகச் (spontaneous) செயல்பட்ட அவரது திறமையை அனைவரும் பாராட்டினர்.
அந்த விமான ஓட்டி, இதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் விதிமுறைக்கு உட்பட்ட ஓடுபாதையில் விமானத்தை இறக்கியது செயல் ஒழுக்கம். அவரே அவசரகாலத்தில் ஆற்றில் இறக்கி, அத்தனை பயணிகளையும் காப்பாற்றியது திறமை.
எனவே, ஒரு செயலை முறையாகக் கற்று ஒழுங்காகச் செயல்படுவது செயல்ஒழுக்கம். அந்தச் செயலை, தொடர்ந்து சிறப்பாகச் செய்வது அனுபவம். அதையே பதட்டமான நேரத்திலும் பொறுப்பாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுத்துவது திறமை. ஆகவே ஒழுக்கமே செயலின் உயிர் நாடி, அதுவே பயிற்சி பெற்று அனுபவமாகி சரியான நேரத்தில் திறமையாக வெளிப்படும்.
செய்வன திருந்தச் செய்தல்:
எந்த வேலையையும் கற்றுக்கொள்ளும்போதே முழுஈடுபாட்டுடன் கற்று, அதை முறையாகச் செயல்படுத்தி, நல்ல அனுபவம் (பயிற்சி) பெறவேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் திருத்தமாகச் செய்துவந்தால் அந்தச் செயல்களின் தொகுப்பு மொத்தமாகச் சேர்ந்து வாழ்நாள் சாதனையாக வளர்ந்து நிற்கும். அப்போது நாமும் சாதனையாளர் வரிசையில் இடம்பெறலாம். நாம் செய்யும் செயல்கள் பொதுநல நோக்கோடு இருந்தால் உலகமே நம் வெற்றியை மகிழ்ச்சியோடு வரவேற்கும்.
# நன்றி.