எவரெஸ்ட் சிகரம் ஏறுபவர்களை இந்த உலகமே பாராட்டுகிறது. அந்தச் சிகரத்தின் உச்சியில் எந்தப் புதையலும் இல்லை, அதில் ஏறுவதால் உலகில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஆனாலும் அந்த உயர்ந்த சிகரத்தின் உச்சியை அடைந்தவரை உலகமே வியந்து பாராட்டுகிறது.
ஏனெனில் சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறும் மனஉறுதி உலகமக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டியது என்று உணர்த்த, அந்த மனஉறுதிக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் உலகம் இதைக் கொண்டாடுகிறது.
உயர்ந்த சிகரம், குளிர்ந்த தட்பவெப்பநிலை, பிராணவாயு (0xygen) குறைபாட்டினால் ஏற்படும் உடல்நிலை மாற்றங்கள், இதுபோன்ற சவால்களை எதிர்நோக்கிய அவர்களின் திட்டமிடல்கள், இந்த உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் அவசியம் இருக்க வேண்டிய அடிப்படை பாடமாகும்.
சவால்கள்:
சிறந்த திட்டமிட்ட மலையேற்றத்திலும் எதிர்பார்த்ததைவிட மிகக் கடுமையான சூழ்நிலைகளும், உடன் பயணித்தோரின் இழப்புகளும் ஏற்படலாம். அதனால் ஏற்படும் மனஅழுத்தம் மிகக் கடினமான சவாலாகும்.
முன்வைத்தக் காலை பின்னிழுக்கும் கயிறுகளான இவை அனைத்தையும் தகர்த்தெறிந்து, விடாமுயற்சியோடும், மிகுந்த மனஉறுதியோடும், தன்னிலையில் சற்றும் தளராது, தன்னையே தான் வெற்றி கொள்ளும் மனவுறுதியைப் பாராட்டவே, இதை உலகம் கொண்டாடுகிறது. இதுவே, வாழ்க்கையின் நேர்மையான குறிக்கோள்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய மாறா நிலைப்பாட்டிற்கும் சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
வாழ்க்கை:
தடைகளற்ற பயணம் என்பது இல்லவே இல்லை. சரியான திட்டமிடல்களும், முன்னேற்பாடுகளும், வெற்றியை நோக்கிய பயணத்திற்கு உதவிடலாம். ஆனாலும் முழுமையான வெற்றியென்பது அவரவர் மனஉறுதியைப் பொருத்தே அமைகிறது.
வாய்ப்புகள்:
எனவே, வெற்றி என்பதும் தோல்வி என்பதும் தனியாக ஒன்றுமில்லை அனைத்துமே நாம் தொடர்ந்து செய்யும் செயல்களின் வாய்ப்புகளால் நிகழும் விளைவுகளே.
முயற்சி திருவினையாக்கும்:
அதற்குச் செய்யவேண்டிய நியாயமான முயற்சியையும், முறையான பயிற்சியையும், கடின உழைப்பையும், நல்ல வாய்ப்பாகக் கருதி பயன்படுத்தவேண்டும். மனஉறுதியை ஒரே வாய்ப்பாகக் கொண்டு தெளிவான பாதையைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து உறுதியாக நடக்கவேண்டும்.
# நன்றி.