வெண்ணாற்றங் கரையினிலே
வெண்ணிலா ஒளியினிலே
வீடு கட்டி விளையாடியது, ஒருகாலம்!
ஆறெல்லாம் மணலாக
மணல் எல்லாம் வீடாக
அடுக்கடுக்காய் மாறியது பார். இது காலம்!!
வேப்பமர கிளையினிலே
ஊஞ்சல் கட்டி விளையாடி
உள்ளம் மகிழ்ந்ததுண்டு, ஒருகாலம்!
வீட்டுக்குள் அடைகாத்து
கைப்பேசிக்குள் கண்பதித்து
அலுங்காமல் விளையாடுது பார். இது காலம்!!
கம்மாய் நீரில் குளித்துவிட்டு,
கேணி தண்ணிர் குடித்துவிட்டு,
காத்தாடப் படுத்திருந்தது, ஒருகாலம்!
வாளி நீரில் குளித்துவிட்டு,
கேன் தண்ணீர் குடித்துவிட்டு,
குளிர் அறையில் தூங்குது பார். இது காலம்!!!
ஆலும் வேலும் பல்லு தேய்க்க
ஆ’ வின் பாலை கறந்து குடிக்க
குனிந்து நிமிர்ந்து வேலை செய்தது, ஒருகாலம்!
பசையைப் போட்டுப் பல்லு தேய்த்து,
பாக்கெட் பாலும் காய்ச்சிக் குடித்து
பதட்டமாக ஓடுது பார். இது காலம்!!
அக்கம் பக்கம் பேசிகிட்டு
அனுசரனையா பழகிகிட்டு,
அண்ணந்தம்பியா வாழ்ந்தது, ஒருகாலம்!
பேச்சுத்துணை இல்லாம பேருகூட தெரியாம
பிளாட்டுக்குள்ளே பலவருசம்,
வாய்மூடி வாழுது பார். இது காலம்!!
வண்டி கட்டி உறவு வந்தா,
வாய் நிறைய பேசிகிட்டே,
வகைவகையா உபசரித்தது, ஒருகாலம்!
போன் பண்ணி போனாலும்
காபி தண்ணி குடுக்காம,
சீரியலில் மூழ்குது பார். இது காலம்!!
பிள்ளைகள் தவறு செய்தால்
பெற்றோரே கடிந்தனர்
பெரியோரும் திருத்தினர், ஒருகாலம்!
பிள்ளையோடு சேர்ந்துகிட்டு
பெற்றோரும் பெரியோரும்
சிறியோராய் மாறிப்போனார். இது காலம்!!
கால் அரைக்கால் கணக்கையெல்லாம்
கச்சிதமா மனசோட
கூட்டிப் பெருக்கி போட்டதெல்லாம், ஒருகாலம்!
கட்டுக்கட்டா படித்தாலும்
கையளவு கணக்குப் போட
கால்குலேட்டர் தேடுது பார். இது காலம்!!
அயராது உழைத்தாலும்
ஆயகலை தெரிந்தாலும்
அடக்கமாக இருந்த மக்கள், ஒருகாலம்!
எட்டு வைத்து நடக்கும் முன்னே
எழுத்தறிவு படிக்கும் முன்னே
எகத்தாளம் பேசுது பார். இது காலம்!!
பெரியோரை வணங்கி விட்டு,
பேசினாலும் பொறுமை காத்து,
பெருமையோடு வாழ்ந்த மக்கள், ஒருகாலம்!
பெருமைகளை மறந்துவிட்டு,
பேச்சையெல்லாம் தட்டிவிட்டு,
பேஷன் என நடக்குது பார். இது காலம்!!
# நன்றி.