பெண்கள் நாட்டின் கண்கள் என்று
புகழாரம் சூட்ட வேண்டாம்!
கண்கள் இரண்டும் கலங்கும் வண்ணம்
கயமைகள் செய்ய வேண்டாம்.
மலரினும் மெலிதென்னும்
மந்திரச்சொல் வேண்டாம்!
மலைக்க வைக்கும் செயல்களுக்கு
மதிப்பைக் குறைக்க வேண்டாம்.
சரிநிகர் சமானம் என்ற
மேடைப் பேச்சு வேண்டாம்!
சக உயிர்தான் என்றுணரா
பாதகமும் வேண்டாம்.
புதையல் போலப் பெண்ணினத்தைப்
போற்றிப் புகழ வேண்டாம்!
பொறுமையிலே பூமியென
புதைத்திடவும் வேண்டாம்.
உலக அழகி பட்டம் தந்து
மகுடம் சூட்ட வேண்டாம்!
உழைத்து வாழும் பெண்ணை யாரும்
இழிவு செய்ய வேண்டாம்.
குலவிளக்கே என்று சொல்லி
கும்பிடவும் வேண்டாம்!
குரல்வளையை நெறித்துவிட்டு
குதர்க்கம் பேச வேண்டாம்.
சுயமரியாதை உள்ள பெண்ணை
விந்தை என வியக்க வேண்டாம்!
தந்திரச் சொல் பேசியே
வஞ்சம் செய்து அடக்க வேண்டாம்.
மலர் போல பாதுகாக்க
மாயம் செய்ய வேண்டாம்!
புனிதம் என்று சொல்லியே
மனிதம் மறக்க வேண்டாம்.
# நன்றி .