பெண்ணே! நீ யார் என்ற
உண்மையைதான் உணர்ந்தாயா?
உலகம் சொல்லும் உருட்டுகள் எல்லாம்
உண்மைகள் என்றே நினைத்தாயா?
உனக்குள் இருக்கும் உன்மனதை
உன்னையன்றி யார் அறிவார்?
உன்னை மதிக்கும் உறவுக்கெல்லாம்
உனைப்போல் அன்பை யார் தருவார்?
பெண்ணே! நீ அழகென்றாலும்
அதில் மயங்கி போகாதே,
குளிர் நிலவென்றே சொன்னாலும்
நீ தேய்ந்து குறையாதே.
பொன்னென்றே உரைத்தாலும்
போதுமென்று நினைக்காதே,
தங்கமே என்றாலும்
தன்னிலை மறந்து மங்காதே.
போற்றும் புகழுரையைப்
புன்னகையால் கடந்துவிட்டு,
வாழும் வகையறிந்து
வாழ்ந்தேதான் பார்த்துவிடு.
ஊர்க்கூடிப் பேசுவதை
ஓரமாக வைத்துவிட்டு,
உனக்காக நீ என்றும்
உறுதியாக இருந்துவிடு!
சுதந்திரம் என்பதை சுவைக்க நினைத்தால்
பொறுப்புகள் ஏற்க துணிந்து விடு.
வெற்றிகள் வேண்டும் என்றே நினைத்தால்
வீண் வம்புகள் யாவும் விட்டு விடு.
மதிப்புடன் வாழும் நிலை என்றாலும்
சுயமதிப்பைத் தினமும் வளர்த்துப் பெறு.
சமமாய் வாழும் வாய்ப்புள்ளச் சூழலில்
சமநிலை காக்கும் முயற்சியெடு.
விட்டுக் கொடுப்பதும் தட்டிக் கேட்பதும்
உணர்ந்தே எல்லை வகுத்துவிடு.
அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுவதே
வாழ்க்கையின் வாய்ப்பு என வாழ்ந்து விடு.
அன்பான கிளியென்று
அடிமைக்கூண்டில் அடைத்திட்டால்
புலியாய் மாறி புதுமுகம் காட்டும்
புதுமை பெண்ணெனச் சீறிவிடு.
கல்வியில் ஏதும் குறையில்லை,
கலைகள் கற்பதில் எல்லையில்லை,
உன்னைக் காக்கும் வலிமையின் கல்வி
நிறையெனக் கொள்வாய்ப் பெண்ணே.
# நன்றி.