ஓர் ஊரில் சுந்தரம் என்ற சிறுவன் இருந்தான். ஒருநாள் அவன் வீட்டுக்கு முன்பு நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு கிளி பறக்க முடியாமல் சுந்தரத்தின் அருகில் வந்து விழுந்தது. அந்தக் கிளியைக் கையில் எடுத்த சுந்தரம் அதன் காலில் காயம் இருப்பதைப் பார்த்தான்.
உடனே அதற்குத் தேவையான சிகிச்சையைச் செய்து மிகவும் பாதுகாப்பாக ஒரு கூண்டில் வைத்து வேளாவேளைக்குச் சுவையான பழங்கள், பருப்புகளை எல்லாம் தானே கொடுத்துப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டான். நான்கு நாளில் அந்தக் கிளியின் காலில் காயம் ஆறிவிட்டது. ஆனாலும் அதை வெளியில் விடாமல் தன் நண்பர்கள் யார் வந்தாலும் அதைப் பெருமையாகக் காட்டுவான். அந்தக் கூண்டை வேறு எவரும் திறந்துவிடக் கூடாது என்பதால் எப்போதும் பூட்டியே வைத்திருந்தான்.
கிளிக்குத் தக்க சமயத்தில் தகுந்த சிகிச்சை அளித்துப் பாதுகாத்த மகனை பாராட்டிய சுந்தரத்தின் பெற்றோர், “பறவைகளின் சிறகுகள் சுதந்திரமாக வானில் பறப்பதற்காக அமைந்தவை, அவற்றை இதுபோல கூண்டில் அடைத்து வளர்ப்பது பாவம்” என்று அவனிடம் தொடர்ந்து கூறிவந்தனர்.
பெற்றோர்களின் வார்த்தைகள் நியாயம் என்று புரிந்தாலும், கிளியின் வருகைக்குப் பின்னர் நண்பர்களிடம் தனக்குக் கிடைத்திருக்கும் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்று நினைத்துக் கிளியைக் கூண்டிலேயே வைத்திருந்தான்.
அதனால் பெற்றோர்கள் அவ்வாறு சொல்லும்போதெல்லாம், அந்தக் கிளி வெளியில் சென்று கஷ்டப்பட்டு உணவு தேடவேண்டிய அவசியம் இல்லாமல் சுகமாக வைத்திருப்பதாகக் கூறுவான்.
ஒரு நாள் சுந்தரத்திற்குக் காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மூன்று நாள் சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறிய சுந்தரம், சீக்கிரம் வீட்டுக்குச் சென்று கிளியைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
அப்போது சுந்தரத்தின் அறைக்கு வந்த மருத்துவர் அவனைப் பார்த்து, “உடல் நலன் தேறிவிட்டது, இனி நன்றாக சாப்பிட்டு ஓய்வு எடுத்துக்கொள்” என்று கூறிவிட்டு நகர்ந்தார். சுந்தரம் உடனே மருத்துவரிடம், “இன்று நான் வீட்டுக்குச் செல்லலாமா?” என்று கேட்டான். அதற்கு அவர், “நீ ஏன் செல்லவேண்டும், இங்கேயே பிடித்த உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு இந்த அறையிலேயே விளையாடு” என்றார்.
இதைக் கேட்டு மிரண்டு போன சுந்தரம், “நான் இங்கு இருக்க மாட்டேன். நான் உடனே வீட்டுக்குப் போகவேண்டும்” என்று கண்களில் நீர் கோர்க்கப் பிடிவாதமாகக் கூறினான். மருத்துவர் சிரித்துக்கொண்டே, “இன்றே நீ வீட்டுக்குப் போகலாம். எப்போதும் ஆரோக்கியமாக இரு”, என்று கூறிவிட்டுச் சென்றார்.
அதன் பிறகு சுந்தரம் யாருடனும் எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டுக்குக் கிளம்பினான். வீட்டிற்குள் வந்த உடனே நேராக சென்று, கிளிக்குப் பழங்களைக் கொடுத்துவிட்டுக் கூண்டைத் திறந்துவிட்டான். அதற்காகவே காத்திருந்த கிளியும் மிகவும் சந்தோஷமாகத் தன் சிறகுகளை விரித்து உயரப் பறந்தது.
கிளி சுதந்திரமாகப் பறந்து செல்வதைப் பார்த்து மகிழும் மகனின் நல்ல மனமாற்றத்தைக் கண்டு அவனுடைய பெற்றோர்களும் மகிழ்ந்தார்கள்.
வீரிய விதைகளாகவே இருந்தாலும், பண்பட்ட மண்ணில் விதைதால்தான் அவை முளைத்து, மண்ணின் வளத்துக்கு ஏற்றார் போல பலன் தருகிறது. அதுபோல அனுபவம் நிறைந்த மனதிலே விளையும் அன்பு மேலும் செழித்து வளர்கிறது.
#நன்றி.