மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையானவை எவை? Magizhchchiyaana Vaazhkkaikku Thevaiyaanavai Evai? The Essentials for a Happay Life.

தேடுதலும், புரிதலும்:

உலகில் உள்ள அனைவருமே மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறோம்.  ஆனால் இதை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் சாத்தியபடுத்த முடிவதில்லை.  பெரும்பாலான நேரங்களில், பொறுப்புகளையும், பிரச்சனைகளையும் தவிர்க்க நினைக்கும் மனம் மகிழ்ச்சியை ஏக்கத்தோடு தேடிக்கொண்டே இருக்கிறது. 

இவ்வாறு பொறுப்புகள் இல்லாத, பிரச்சனைகளற்ற மகிழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் தேடிக் களைப்பான மனிதன், பொறுப்புகளும், பிரச்சனைகளும் நிறைந்த சூழ்நிலைகளை முறையாகக் கையாள்வதே வாழ்க்கையில் மகிழ்ச்சி,  என்று மிகத் தாமதமாகப் புரிந்துகொள்கிறான். 

சூழல்:

தேன் நிறைந்த வண்ணமயமான பூக்களின் சூழலில், பறக்கும் வண்ணத்துப்பூச்சியின் மகிழ்ச்சி பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.  ஆனால் அதே சூழலில் உள்ள தேனீ, அதன் விஷக்கொடுக்கினால் அச்சமூட்டுகிறது.

அதுபோல, சூழலுக்கே மகிழ்ச்சி வண்ணம் தீட்டுபவர்கள் தாங்களும் அந்த மகிழ்ச்சியை உணர்கிறார்கள்.  ஆனால் அதே சூழலிலும் மாறான சிந்தனை கொண்டவர்கள் அந்தச் சூழலையே காரணமாக்கி மனதின் மகிழ்ச்சியைச் சிதைக்கிறார்கள்.  

எனவே, சூழலை விட, சூழலை அணுகும் முறையே மனமகிழ்ச்சிக்கு உதவும் முக்கியக் கருவியாக உள்ளது.

எண்ணமே விதி:

சிறுவர்களாக இருந்த பாண்டவர்களையும், கவுரவர்களையும் தனித்தனியாக இரு வேறு அறைகளில் அமர வைத்தார்கள்.  பின்னர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் கைகளை மடக்க முடியாதவாறு நீட்டியபடியே இருக்குமாறு கட்டிவிட்டு, அவர்களுக்கு முன்னிலையில் பலகாரங்களையும் வைத்துச் சாப்பிட சொன்னார்கள்.

அப்போது கெளரவர்கள் தங்களுடைய கைகளை மடக்க முடியாததால், பலகாரங்களை எடுத்துச் சாப்பிடமுடியாத ஆத்திரத்தில் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.  ஆனால் பாண்டவர்களோ நீட்டியபடியே இருந்த கைகளால் பலகாரத்தை எடுத்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ச்சியாக உண்டு மகிழ்ந்தார்கள்.  

சொர்கமும் நரகமும் சூழலைக் கையாளும் விதத்தில்தான் இருக்கிறது என்று விளக்குவதற்காகக் கூறப்பட்ட இந்தக் கதையில், சுயநலமற்ற அணுகு முறையால் மகிழ்ச்சியான சூழலை உருவாக்க முடியும் என்று கூறும் சிறந்த கதை.  இன்பமும் துன்பமும் தவிர்க்கமுடியாத இயற்கையின் நியதி, ஆனால் அதை ஏற்பதும் மறுப்பதும் எண்ணத்தில் விளையும் விதி.  

இனிப்பை உண்ட பின்பு குடிக்கும் சுவையான காபி கசப்பதைப் போல, தற்பெருமை, சுயநலம் போன்றவை இனிப்பாக ஊறியிருக்கும் மனதில், மற்றவர்களை மதித்தலும், அனுசரித்து வாழ்தலும் மகிழ்ச்சிக்கு மாறான சூழலாக உணரப்படுகிறது.  

ஒப்பீடு:

ஒரு ஊரில், பூனையும், யானையும் நட்பாகப் பழகிக்கொண்டிருந்தன.  அப்போது அவை இரண்டுமே கருவுற்றிருந்ததால், அந்த மகிழ்ச்சியை ஒன்றுக்கொன்று பரிமாறிக்கொண்டன.  சில நாட்கள் சென்ற பின்னர், இரண்டு மாதத்தில் குட்டிகளை ஈன்ற பூனை தன் குட்டிகளோடு விளையாடிக் கொண்டிருந்தது.  இதைப்  பார்த்த யானைக்கு, தன்னுடைய குட்டியையும் விரைவில் பார்க்க வேண்டும் ஆசை வந்தது.  ஆனால் அதற்கு தோராயமாக இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டுமே என்ற எண்ணம் சலிப்பையும் சோர்வையும் ஏற்படுத்தியது.  

இதைக் கண்ட மூத்தயானை ஒன்று, கருவுற்றிருந்த இளம் யானையின் அருகில் சென்றது.  பின்னர் அதனிடம் பால் நிறைந்த பெரிய கிண்ணத்தைக் கொடுத்து “இன்று முழுவதுக்கும் இந்தப் பால் மட்டும்தான் உன்னுடைய உணவு.  வேறு உணவுகளைத் தொடக்கூடாது”. என்று கூறியது.  

இதைக் கேட்ட இளம் யானைக்குக் கோபம் வந்தது.  “நான் என்ன பூனையா?இந்தப் பால் எனக்கு ஒருவாய்க்குக்கூட போதாது, இது எப்படி நாள் முழுவதற்கும் போதுமானதாக இருக்கும்?  எனக்கு வாழைப்பழத்தாரும் தேங்காய்களும்தான் வேண்டும்”, என்று கோபமாகக் கூறியது.

இப்போது மூத்த யானை தன்னுடைய துதிக்கையால் இளம் யானையை ஆறுதலாகத் தொட்டு, “நம்முடைய வயிற்றுக்கு அதிக உணவு தேவைப்படுவது இயல்பு என்பதுபோலவே, நம் வயிற்றில் வளரும் குட்டி பலத்துடன் வளர்வதற்கு அதிக காலம் தேவைப்படும் என்பதும் இயல்பு.  

எனவே, ஒப்பிட முடியாத தனிப்பட்ட இயல்புகளை அப்படியே ஏற்றுக்கொள்வது நல்லது.  தேவையில்லாத எண்ணங்களால் மனதைக் குழப்பிக்கொண்டு வீணாகக் கவலைப்படாதே.  இயற்கைக் கொடுத்திருக்கும் இன்றைய சூழ்நிலையை மகிழ்ச்சியாகக் கடந்தால்தான் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்கும்“, என்று கூறியது.

எந்த நிலையிலும், மற்றவரோடு ஒப்பீடு செய்யும் எதிர்மறையான சிந்தனையால் முதலில் சுயமதிப்புப் பாதிப்பு அடைகிறது.  மனதளவில் ஏற்படும் இந்தத் தாழ்வுஎண்ணம், பாடுபட்டுக் கிடைக்கும் முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியாக உணர மறுக்கிறது. இதனால்தான் ஒப்பீடு செய்வது ஆரோக்கியமான மனநிலை அல்ல என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். 

பாராட்டு:

பாராட்டுக்காக இல்லாமல் உள்ளார்ந்த அக்கறையோடு பொறுப்பாகச் செய்யும் செயல் மனமகிழ்ச்சியை அளிக்கும்.  மேலும், அங்கீகாரமும் பாராட்டும் பெறுபவருக்கு மட்டுமல்ல தருபவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் சக்தி பெற்றவை.  

எனவே, பொறுப்புகளை முறையாகக் கையாள்வதும், வாழும் சூழ்நிலையை நேர்மறையாக அணுகுவதும் மனதில் மகிழ்ச்சியை உருவாக்கும் குணங்கள் ஆகும்.  மேலும், (சுயநலமற்ற, தாழ்வுமனப்பான்மையற்ற) நாகரிகமான அணுகுமுறைகள், தனித்துவமானத் திறமைகள் போன்றவையும் மகிழ்ச்சிக்கு வழிகாட்டும் நல்ல செயல்கள் ஆகும்.  

இத்தகைய நல்ல குணங்களும், நல்ல செயல்களும், மாறாத அன்பும் உள்ளவர்களை மற்றவர்கள் உணர்ந்து புரிந்துகொள்வார்கள் என்ற ‘எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வது’ மனமகிழ்ச்சிக்குக் கூடுதல் பாதுகாப்பாக அமையும்.  இதனால், தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ செய்பவர் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.   

மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் அனைவருமே நன்கு அறிந்த இந்தக் கருத்துக்களைத் தனிக்கவனம் செலுத்தி இயன்றவரை அதை நடைமுறை படுத்துவது மகிழ்ச்சியான வாழ்க்கைக்குப் பரிசாக இருக்கும்.  

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *