அடக்குமுறை:
சின்னஞ்சிறு நெருப்பும்
காட்டுத் தீயாக மாறலாம்.
உலகின் ஏதேனுமொரு மூலையில்,
ஏதேனுமொரு கூட்டில்,
எரிந்துகொண்டிருக்கும்
நெருப்பின் வேர்,
தொடர் நிகழ்வாகவே
தூண்டப்படுகிறது.
எப்போது வேண்டுமானாலும்
அணைத்துவிடலாம்
என்கிற
அலட்சியமான நம்பிக்கையில்.
முதுமை:
கனவுகள் கரைந்துபோன
முதுமையின் இரவுகள்
இளமையின் நினைவுகளை
இதயத்தில் சுமந்தபடி
உறக்கம் தொலைத்த
விழிப்புடனே
விடியலை வரவேற்கின்றன.
புரிதல்:
தன்னைப் போலவே பிறரை
எண்ணும் தன்மை
நேர்மறையாக
இருக்க வேண்டும்
என்பதை மறந்த
கோடரிக்காம்பு.
இயலாமையால் இறுக்கப்பட்ட
தன்னிலை தெரிந்தும்,
கோடரியைத் தலையில் தாங்கி,
நிமிர்ந்து நின்று,
தன் இனத்திற்கும் ஏமாற்றத்தைப்
பரிசளிக்கிறது.
இதனால் வீழ்த்தப்படுவது
மரம் மட்டுமல்ல!
நம்மில் ஒருவருக்கு
நம் அருமை தெரியும்,
வலியும் தெரியும் என்ற
நம்பிக்கையும்
சேர்த்தேதான்.
மதிப்பு:
இன்றைய செல்லாக்காசுகள்
முன்பொரு காலத்தில்
முக்கியப் பொக்கிஷமாக,
சேமிப்பின் நிதியாக,
வளமையின் குறியீடாக,
மதிப்பு மிக்க நிலையில்
பாதுகாப்பாக
இருந்திருக்கக் கூடும்.
……………………………………………………………………..
# நன்றி .