பயத்தின் முகம்:
ஓட்டுக்குள் ஒளிந்து,
தற்காத்துக்கொள்ளும்
தயக்கமும்,
முட்களைச் சிலிர்த்தபடி,
தாக்குதலுக்குத் தயாராகும்
பதட்டமும்,
பயத்தின் எல்லைக்குள்
நிறம் மாறுகின்ற
ஒரே முகம்தான்.
வலிமையின் முகம்.
தடையைத் தாண்டுவதும்,
தாக்குதலைத் தகர்ப்பதும்;
கணிக்கப்பட்ட நகர்வாக
திடமான வல்லமையோடு
வெளிப்படுவதே
வலிமையின் முகம்.
சுயநல முகம்.
நேர்மையை
அலட்சியப் படுத்துவதும்,
பொதுவான உரிமைகளைத்
தனதாக்கிக் கொள்வதும்
வெட்கமின்றி முகம்காட்டும்
சுயநலத்தின் ஆணவம்.
பொய் முகம்:
முறுவலோடு
முதுகைத் தடவி,
முன்னே நீட்டப்படும்
எலும்புத் துண்டு,
தன்னுடைய
விலாவிலிருந்து
உருவப்பட்டதுதான்
என்று அறியும்வரை
துரோகத்தின்
வலி தெரியாது.
புதுமுகம்:
மானுடம் என்பதும் பழங்கதைதான், அதன்
மகத்துவம் என்பதும் பழங்கதைதான்.
சிந்தனை என்பதும் பழங்கதைதான்; அதில்
சேரும் மாற்றம் மட்டுமே புதுக்கதையாம்.
நன்மையும் தீமையும் புதிதில்லை
ஏற்பும் மறுப்பும் புதிதில்லை
உயர்வும் தாழ்வும் புதிதில்லை; நிலை
மாறும் எல்லைகள் மட்டுமே புதிதாகும்.
# நன்றி.