மொழிகள்:
தாய்மொழி, கல்விமொழி, சமூகமொழி, அலுவலகமொழி, வர்த்தகமொழி என்று, மக்கள் தங்கள் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்றபடி பலவகையான மொழிகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த மொழிகளுக்கு இணையான சைகைமொழியும் அதற்கே உரிய சிறப்புத் தன்மையோடு முக்கிய இடம் வகிக்கிறது. இத்தகைய எல்லா மொழிகளுக்கும் நண்பனாக விளங்கும் உடல்மொழி (Body Language) கருத்துப் பரிமாற்றத்திற்கு வலுசேர்ப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது.
அகராதி:
ஒவ்வொரு மொழிக்கும் அகராதி இருப்பதுபோலவே உடல்மொழிக்கும் அகராதி இருக்கிறது. ஆனால் இந்த அகராதி கூறும் பொருள் உலகமெங்கும் ஒரேபொருளாக இல்லாமல், நாட்டுக்கு நாடு வேறுபடுவதும் உண்டு. மேலும் சமூகம், ஊர், குழு, வீடு, தனிப்பட்ட மனிதர் என்று வெவ்வேறு நிலைகளில் வேறுபட்ட பொருள்களிலும் வெளிப்படுவது உண்டு.
இவ்வாறு நாட்டைச் சார்ந்து, சூழலைச் சார்ந்து வெளிப்படுகின்ற உடல்மொழி வயது மற்றும் பாலினம் சார்ந்தும், வெளிப்படுவதும், புரிந்துகொள்வதும் நிகழ்கிறது. பெரும்பாலான நேரங்களில் இது நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக உணர்வுபூர்வமாகப் பார்க்கப்படுகிறது.
புரிதல்:
உதாரணமாக,
கால்மேல் கால் போட்டு அமர்வதை மரியாதைக் குறைவான செயலாகப் பார்க்கும் வழக்கம், நம்நாட்டில் மட்டுமல்லாமல் ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் உள்ளது. அப்படியில்லாமல் அது இயல்பாக உள்ள நாடுகளான அமெரிக்காவில் (ஆண்கள்) 4 போன்ற வடிவத்தில் ஒரு காலின் முட்டியின் மீது மற்றொரு காலின் கணுக்கால் வைப்பதும், அமெரிக்க பெண்கள் மற்றும் ஐரோப்பாவினர் கால்களை ஒன்றன்மீது ஒன்று பின்னியபடி போடுவதும் என்று அமரும் முறையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் கட்டை விரலை உயர்த்தி thumbs up என்று காட்டுவது, சிறப்பு, வெற்றி என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கிரீஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இதன் பொருள் வேறுபடுகிறது.
ஐரோப்பாவில் ஒருவரை அருகில் அழைப்பதற்கு ஆட்காட்டி விரலைப் பயன்படுத்துவது இயல்பான முறையாகவும், சீனா, கிழக்காசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மரியாதைக் குறைவான, தரமற்ற செயலாகவும், பிலிப்பைன்ஸ் நாட்டில் குற்றமாகவும் பார்க்கப்படுகிறது.
எந்த வம்பும் வேண்டாம் என்று மவுனமாக இருந்தாலும், மவுனமும் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாக பொருள்கொள்ளப்படுகிறது. குழுவினரோடு இருக்கும்போதும் மவுனமாக இருப்பதை, வட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அவமரியாதையாக, விருப்பமற்ற நிலையாகப் பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, கைக்குலுக்குதல், கண்ணைப் பார்த்துப் பேசுதல், தொட்டுப்பேசுதல், கைஅசைவுகள், தலையை ஆட்டுதல், முகபாவங்கள் என்ற ஒவ்வொரு உடல்மொழிக்கும் ஒவ்வொரு நாடும் ஒருசில வரைமுறைகளை வகுத்து வைத்துள்ளது.
எனவே, உடல்மொழி என்பது ஒருவருடைய தனிப்பட்ட வெளிப்பாடாக மட்டும் இல்லாமல் சூழலுக்கு ஏற்றபடி பல்வேறு நிலைகளில் புரிந்துகொள்ளப்படுவது பல்வேறு விளைவுகளுக்கும் முக்கிய காரணமாக இயங்குகிறது என்பது தெளிவாகிறது.
பொது உணர்திறன். Common Sense:
உலகமயமாக்கப்பட்ட இன்றைய கலாச்சாரத்தில், உடல்மொழி என்பதும் பல மாற்றங்களை அடைந்திருக்கலாம். என்றாலும் நாம் இருக்கும் இடத்திற்கு ஏற்ப, நம்முடைய கண்ணியத்தைக் காக்கும் வகையிலும், மற்றவர்களுக்கு மரியாதையைத் தெரிவிக்கும் வகையிலும் நாகரிகமாக வெளிப்படும் உடல்மொழியே ஒருவருடைய (Common Sense) பொது உணர்திறன் ஆகும்.
சூழலுக்கு ஏற்ப குரல்மொழியில் ஏற்றம், இறக்கம், மென்மை, வன்மை என்ற வேறுபாடுகள் உணர்வுகளின் மாற்றங்களைக் கூறுவதுபோலவே, உடல்மொழியில் இருக்கும் மாறுபாடுகள் மாறுகின்ற மனநிலையை வெளிப்படுத்துகின்றன.
ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்வதற்கும், பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்வதற்கும், நண்பர்களோடு விளையாட செல்வதற்கும் உள்ள உடல்மொழியின் மாறுபாடு அக்குழந்தையின் மனநிலையை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகிறது.
எனவே, மனிதர்களின் உடல்மொழி என்பது உலகளாவிய பொதுவான சில குறிப்புகளை வெளிப்படுத்துகிறது என்றாலும், ஒவ்வொரு நாட்டிற்கும், சமூகத்திற்கும் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட ஒரு மனிதருக்கும்கூட அவருடைய தனிப்பட்ட இயல்புகளை வெளிப்படுத்தும் சில பிரத்தியேகமான தன்மை உடையதாகவும் இருக்கிறது.
மனதிற்கும் உடலுக்கும் நேரடியான தொடர்பு இருப்பதால், ஒருவருடைய மனதின் உண்மையான தகுதியைக் கணிப்பதற்கு உடல்மொழியும் ஒரு முக்கியமான பண்பாகக் கவனிக்கப்படுகிறது. அவ்வாறு கூர்ந்து கவனிக்கப்படும் சூழல்களில் கவனயீர்ப்பைப் பெறுவதைவிட நம்பிக்கையைத் தருகின்ற உடல்மொழியே வெற்றிக்குக் காரணமாகிறது. இயல்பான உடல்மொழி என்பது ஒவ்வொரு வினாடியும் நம்மையறியாமல் நாமே அறிவிக்கும் நம்முடைய தகுதியாகும். அது உண்மையாக இருக்கும் நிலையில் அதுவே நம்முடைய நிரந்தரமான பண்பாகவும் வெளிப்படுகிறது.
எனவே, நம்முடைய மனதில் ஆரோக்கியமான பண்புகள் இயல்பாக இருக்கும்போது, அவை உடல்மொழியிலும் வெளிப்பட்டு சூழலில் நமக்கான அடையாளத்தை அறிமுகப்படுத்துவதோடு, தொடர்ந்து நிகழும் கருத்துப் பரிமாற்றத்தையும் எளிமையாக்குகிறது.
குறிப்புணர்தல்:
உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் அவற்றின் அடிப்படைத் தேவைகளுக்கான உடல்மொழி உள்ளது என்றாலும், மனிதனின் உடல்மொழி அறிவுசார்ந்த முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுகிறது. இடம், பொருள், அறிந்து, பொது உணர்திறனுடன் (Common Sense) வெளிப்படுத்துகின்ற சிறப்பான உடல்மொழியின் உதவியால் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் மனிதன் வெற்றிக்கான வாய்ப்பைப் பெறுகிறான்.
“கூறாமை நோக்கக் குறிப்பறிவான்…”
என்று, ஒருவர் தன்னைப் பற்றி கூறுவதன் முன்னரே அவருடைய முகத்தைப் பார்த்து அவரைப் பற்றியக் குறிப்பை உணரும் திறனுக்கு மிகவும் உதவியாக இருப்பது அவரிடம் வெளிப்படும் உடல்மொழியே ஆகும்.
நாடகம்:
ஒரு மன்னர் தன்னுடைய அரண்மனையில் அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது, “ஒருவருடைய உடையும் தோற்றமும்தான் அவரை யார் என்று அடையாளப்படுத்துகிறது”, என்று மன்னர் கூறினார். மன்னர் கூறியதை மறுத்துப்பேசிய அமைச்சர், “ஒருவர் தன்னை அடையாளப்படுத்தும் உடை, அலங்காரம் போன்ற தோற்றத்தையும் கடந்து அவரிடம் வெளிப்படும் உடல்மொழிதான் உண்மையில் அவர் எத்தகையவர் என்பதை அறிவிக்கிறது”, என்று கூறினார்.
மன்னருக்கு அமைச்சரின் கருத்தில் முழுவதுமாக உடன்பாடு இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது பக்கத்து நாட்டிலிருந்து ஒரு தூதுவர் மன்னனைக் காண்பதற்கு வரப்போவதாகச் செய்தி வந்தது. உடனே மன்னர் தன்னுடைய அவையில் தன்னைப்போலவே உடல்வாகு கொண்ட அமைச்சரை அழைத்து அவருக்குத் தன்னைப் போலவே உடையலங்காரம் செய்து அரியணையில் அமர வைத்து, புதியதாக வரும் தூதுவரை வரவேற்று நலம் விசாரித்துப் பேசும்படி கூறினார். பின்னர், அமைச்சரைப்போல உடையணிந்துகொண்ட மன்னரும், மற்ற அமைச்சர்களின் வரிசையில் அவர்களோடு அமர்ந்து கொண்டார்.
அப்போது வந்த வெளிநாட்டுத் தூதுவர் அரியணையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து வணங்கிவிட்டு, அமைச்சர்களுடன் அமர்ந்திருந்த மன்னரை மிகுந்த மரியாதையுடன் வணங்கி, “மன்னா!” என அழைத்து வந்த செய்தியைக் கூறினார். இதைக் கண்டு ஆச்சரியமடைந்த மன்னர் அந்தத் தூதுவரிடமே தன் சந்தேகத்தைக் கேட்டார்.
அதற்கு அவர், “அரியணையில் இருந்தவரின் பதட்டமான உடல்மொழியும், மற்ற அமைச்சர்களின் இருப்பும், தங்களுடைய இயல்பான தோரணையும் நிலைமையைத் தெளிவாகக் காட்டியது” என்று கூறினார். அந்தத் தூதுவரைப் பாராட்டி அனுப்பிவைத்த மன்னர், உயர்வு என்பது நமக்குள் இருக்கும்போது நம்முடைய உடல்மொழியும் நாடகத்தன்மை இல்லாத இயல்பான உயர்வை வெளிப்படுத்துகிறது என்பதை மன்னர் புரிந்துகொண்டார். இதைப் புரிய வைத்த தன்னுடைய அமைச்சரையும் பாராட்டினார்.
உண்மை மொழி:
ஒருவன் உள்ளுக்குள் என்னவாக இருக்கிறானோ அந்த எண்ணமாகவே வாழ்க்கையில் இயங்குகிறான். அந்த இயக்கமே இயல்பான நிலையில் உடல்மொழியாக தன்னிச்சையாக வெளிப்படுகிறது. எனவே நம்முடைய இயல்பான உடல்மொழி வாழ்க்கையின் உயர்வுக்கு உதவ வேண்டும் என்றால் நமக்குள் இருக்கும் எண்ணங்கள் உயர்ந்தவையாக, தன்னம்பிக்கையோடு இருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது.
# நன்றி.