நுழைவு வாயில்:
பெரிய மாளிகை வீடுகளின் வெளியே நுழைவு வழியில் வாயிற்காவலர் இருப்பார். அவர், அந்த மாளிகையின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பணியாளர்கள் என்று அந்த மாளிகையில் இருப்பவர்களையும், தொடர்ந்து உள்ளே வருபவர்களையும் நன்கு அறிந்திருப்பார்.
அவர்களைத் தவிர புதிதாக யாராவது உள்ளே வருவதற்கு அணுகினால், அணுகுபவர்கள் எல்லோரையும் உள்ளே அனுமதிக்காமல், உரிமையாளரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப, அவருடைய நோக்கம் அறிந்து, யாரை உள்ளே அனுமதிக்க வேண்டும், யாரை அனுமதிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வுடன், சிலரை அனுமதிப்பதும் மற்றவர்களை மறுப்பதுமே நல்ல வாயிற்காவலரின் இயல்பாக இருக்கும்.
இதைப்போலவே, நம்முடைய வாழ்க்கையின் நோக்கம், குறிக்கோள், பலம், பலவீனம், முக்கியத்துவம் தருபவை, தவிர்ப்பவை என்று பலவிதமான எண்ணங்களும், சிந்தனைகளும், உணர்வுகளும் நிறைந்திருக்கும் நம்முடைய மனமாளிகைக்கு நாமே உரிமையாளராக இருக்கிறோம். எனவே, நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான சிந்தனைகளை ஊக்குவித்துச் செயல்படுத்தும் சக்தியுள்ள வாய்ப்புகளையே எப்போதும் எதிர்பார்க்கிறோம்.
இத்தகைய நம் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு, நம் இயல்புக்கேற்ற வரைமுறைகளை உணர்ந்து தேவையான வாய்ப்புகளை வரவேற்று அனுமதிப்பதற்கும், தேவையற்றதைத் தடுத்து மறுப்பதற்கும் மனதிற்கும் ஒரு சிறந்த வாயிற்காவலன் விழிப்போடு இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
மனமாளிகை:
உண்மையில், இத்தகைய ஒரு வாயிற்காவலனை RAS (Reticular Activating System) என்ற பெயரில் நம் மூளையின் பின்பகுதியில், தண்டுவடத்தின் மேற்பகுதியில் இயற்கை நமக்கு சிறப்பாகக் கொடுத்திருக்கிறது என்பதை அறிந்ததும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நாம் எப்போதும் விழிப்போடு இயங்குவதற்கு காரணமாகிய இந்த RAS என்ற அமைப்பு, நம்முடைய மனதில் ஆழமாக, உண்மையாக நினைக்கும் எண்ணத்திற்கு ஏற்ப வாய்ப்புகளை அடையாளம் கண்டு மூளைக்குள் அனுமதிக்கும் ஆற்றல் கொண்டது.
எனவே, மனதின் முக்கியமான தேவைகளைக் காட்சிப்படுத்தி, முறையான அறிவுறுத்தல்களாக மூளைக்கு உணர்த்துவதன் மூலம் RAS இன் ஆற்றலை முழுமையாகப் பெறமுடியும் என்று அறிவியல் கூறுகிறது.
எளிய உதாரணம்:
நாம் இப்போது இருக்கும் இந்த இடத்தில் நம்மைச் சுற்றி பச்சை நிறப்பொருட்கள் எத்தனை இருக்கிறது என்று குறித்துக்கொள்வோம். அதன்பிறகு சிவப்பு நிறப்பொருட்கள் எத்தனை இருக்கிறது என்று குறித்துக் கொள்வோம். இவ்வாறு ஒரு நிறத்தில் உள்ள பொருட்களைத் தேடும்போது அங்கேயே இருக்கும் மற்ற நிறப்பொருட்கள் நம் கவனத்திற்கு வருவதில்லை.
மேலும், ஏதாவது ஒரு குறிப்பிடப் பொருளைத் தேடும்போது, பல்வேறு பொருட்களுக்கிடையில் அந்தப் பொருள் இருந்தாலும் நம்மால் சரியாக அடையாளம் கண்டுபிடித்து எடுக்க முடிகிறது. மனதின் எண்ணத்தை நிறைவேற்றும் பணியில் புலன்களின் துணையோடு இயங்கும் RAS சூழல்களில் எத்தனைப் பொருட்கள் இருந்தாலும் அவற்றுள் நமக்குத் தேவையானதைப் படம்பிடித்து நம் மூளைக்கு அனுப்பிவிடுகிறது.
இவ்வாறு, மனதின் தேடுதலுக்கு ஏற்ப சூழலை ஆராய்ந்து வடிகட்டி தேவையானதை மட்டும் focus செய்து காட்டும் வல்லமை கொண்ட இந்த அமைப்பே, நம்முடைய செயல்களின் முக்கியமான மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் காரணமாக இருக்கிறது.
அதே சமயம் அறிவுறுத்தல்கள் ஏதும் திட்டவட்டமாகக் கொடுக்கப்படாத நிலையில், தொடர்ந்து பார்க்கப்படும் சூழலினால் influence அடைகின்ற RAS அதை மனதிற்குள் அனுமதிப்பதும் நிகழ்ந்துவிடுகிறது. இதனால்தான் சூழலில் உள்ள செயல்களை நம்மையறியாமல் செய்வதும், தொடர்ந்து காட்டப்படும் பலவிதமான காட்சிகளால், விளம்பரங்களால் கவரப்படுவதும் நிகழ்கின்றன.
இவ்வாறு, நாம் கவனத்துடன் RASக்கு அறிவுறுத்தல்கள் ஏதும் தராத நிலையில் மனமாளிகைக்குள் நுழைகின்ற எண்ணங்கள், செயல்கள் போன்றவை அவற்றின் தன்மைக்கு ஏற்ப, பல விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பெறுகின்றன.
முதல் வெற்றி:
நம்முடைய குறிக்கோள்களுக்கு ஏற்ப ஆழ்மனதின் அறிவுறுத்தல்களை உணர்ந்து, பொருத்தமான வாய்ப்புகளை நமக்கு அடையாளம் காட்டுகின்ற RAS, நம்முடைய தொடர் முயற்சிகள் வெற்றியடையும் வாய்ப்பையும் காட்டுகிறது.
நம்முடைய மனம், அறிவு ஆகியவற்றை கவனத்துடன் கையாளும் உரிமையும், பொறுப்பும் நம்மிடமே இருப்பதால் எவற்றை நம் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும், எவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எவற்றை மறுக்க வேண்டும் என்ற தீர்மானமான வரைமுறையை நம்முடைய மூளையில் உள்ள RASக்குத் துல்லியமாக அறிவுறுத்த வேண்டியது நம்முடைய கடமையாகும்.
RASஐ முறையாகக் கையாளும் விழிப்புணர்வின் திறனே நம்முடைய முதல் வெற்றியைத் தீர்மானிக்கிறது. எனவே, இதன் ஆற்றலை மேம்படுத்தும் சில பயிற்சிகளை நம்முடைய வாழ்வியலாக ஏற்றுக்கொள்ளும்போது நாம் எதிர்பார்க்கும் வெற்றியும் நம் வாழ்க்கையோடு இணைந்து நன்மை விளைவிக்கிறது.
1. சிறந்த குறிக்கோளைத் தீர்மானிப்பது.
2. அதை நிறைவேற்றக்கூடிய (positive affirmations) நேர்மறையான கட்டளைகளை தொடர்ந்து மூளைக்குச் சொல்வது.
3. எதிர்பார்க்கும் வெற்றிகளை முறையாகத் திட்டமிட்டு, நிகழ்வுகளாகக் காட்சிப்படுத்துவது.
4. இதுவரை கிடைத்த எல்லாவற்றிற்கும் நன்றி தெரிவிப்பது.
என்பதுபோன்ற நேர்மறையான எண்ணங்கள் மூலமும், தொடர் முயற்சிகளின் மூலமும் RAS என்ற இந்த அமைப்பு நம்முடைய Survival Mechanismஆக ஆற்றலோடு செயல்படுகிறது.
நம்முடைய அறிவுறுத்தல்களுக்கேற்ப விழிப்புணர்வோடு செயல்படுகின்ற இத்தகைய சிறந்த வாயிற்காவலன் நம்முடைய மனமாளிகையின் நுழைவு வாயிலில் இருப்பதால், வாசலில் வரும் சிறந்த வாய்ப்புகள் நம் வாழ்க்கையிலும் வரும் என்பது நிச்சயமே.
# நன்றி.