சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள மனசுதான்.  Clean Mind is Paradise. Thooya Maname Sorgam.

சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள மனசுதான். Clean Mind is Paradise. Thooya Maname Sorgam.

மாசிலன்:

உண்மையில் தூய்மை என்ற வார்த்தை, உடல், பொருள், இடம் என்று கண்ணுக்குப் புலப்படக்கூடிய புறத்தூய்மையைக் குறிப்பது போலவே வெளிப்படையாகத் தெரியாத மனதின் தூய்மையையும் குறிக்கிறது.

தூய்மை என்பது அகம், புறம் என்ற இரு நிலைகளிலும் அவசியம் என்றாலும், வெளிப்படையாகத் தெரிகின்ற புறத்தூய்மைக்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம், மனத்தூய்மைக்கும் கொடுக்கப்படுகிறதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

மாசற்ற மனம்:

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையாற் காணப் படும்.

என்று வள்ளுவர் கூறுவதைச் சிந்தித்துப் பார்த்தால், “மனம் வெளுக்கும் வழியாக” வாய்மை செயல்படுகிறது என்பதும், நமது செயல்பாடுகளின் மூலம் மனதின் தூய்மை வெளிப்படையாகக் காணப்படுகிறது என்பதும் தெளிவாகிறது.

இவ்வாறு, மற்றவர் காணும் வகையில் மனதின் தூய்மையை வெளிப்படுத்துகின்ற,

வாய்மை என்பது என்ன?

அதை எப்படி மேற்கொள்வது?

அதற்காக, செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை எவை?

என்ற நம்முடைய கேள்விகளுக்கு வள்ளுவரின் விளக்கங்களும் இருக்கின்றன.

வாய்மை:

1.இனியவை கூறல்:

வாய்மையின் முதல் நிலையே, “யாதொன்றும் தீமை இலாத சொலல்” என்று கூறப்படுகின்றது.  எனவே, எப்போதும், எல்லோருக்கும் நன்மை தருகின்ற, பயனுள்ள சொற்களைப் பயன்படுத்துவதே மனத்தூய்மைக்கு முதற்படியாகும்.

மற்றவர் மனம் நோகச் செய்யும் வார்த்தைகள் நிரந்தரமான மனவலிக்குக் காரணமாக அமையும்.  எனவே அத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்த்து எப்போதும் நன்மைதரும் வார்த்தைகள் பேசுவது மனஅமைதியை உருவாக்கும்.  இதனால் வாழ்க்கையில் பல நன்மைகளும் வந்து சேரும்.

2.உண்மை கூறல்.

“உள்ளது உள்ளபடி கூறுகின்ற, நேர்மறையான விளைவுகளைத் தருகின்ற வார்த்தைகள்” உண்மையான வார்த்தைகள் ஆகும்.

3.பொய் கூறாதிருத்தல்:

பொறாமை மற்றும் சுயநலம் காரணமாகப் புறம்கூறுதல், ஆணவமாகப் பேசுதல் மற்றும் போலியாகப் பேசுதல் ஆகியவை உண்மைக்கு மாறான வார்த்தைகள் ஆகும்.

இத்தகைய வார்த்தைகளினால் ஒருவேளை தற்காலிகப் பலன்கள் கிடைப்பதுபோலத் தோன்றினாலும், அவை நிரந்தரமான மனஅமைதியைக் கெடுக்கும் தன்மை உடையவை என்ற எச்சரிக்கை எப்போதும் நினைவில் கொள்ளத்தக்கது ஆகும்.

4.செயல் தூய்மை:

நன்மை தரக்கூடிய, நேர்மையான செயல்களைக் காலங்கடத்தாமல், சோம்பல் இல்லாமல், நினைத்தபடி வெற்றிகரமாகச் செய்து முடிப்பதே செயல் தூய்மை ஆகும்.  இதுவே மனத்தூய்மைக்குச் சாட்சியாக நின்று சிறப்பான வாழ்க்கையை வடிவமைக்கிறது.

5.பாதுகாப்பு:

கடுமையான வார்த்தைகள், உண்மைக்கு மாறான வார்த்தைகள், பயனற்ற வார்த்தைகள் போன்ற தீமையான சொற்களைத் தவிர்ப்பது பாதுகாப்பான சூழலை உருவாக்கும்.

நன்மையற்ற, முறையற்ற செயல்கள், சான்றோர் பழிக்கும் இழிவான செயல்கள் ஆகியவற்றை மனதாலும் நினையாது, முற்றிலும் தவிர்த்து விடுவது, மனதில் மாசு ஏற்படாமல் காக்கும் சிறந்த தற்காப்புச் செயலாகும்.

உயர்வு:

அகத்தூய்மை என்பது நல்ல எண்ணம், சிறந்த சிந்தனை, நன்மை தருகின்ற, இனிமையான, உண்மையான சொற்கள், மனசாட்சிக்கு நேர்மையான செயல்கள், வாழும் ஒழுங்கு முறை போன்றவையே மனதின் தூய்மையை வெளிப்படுத்தும் வாய்மையாகும்.

வாழ்க்கைக்குத் தேவையான முதன்மையான அறமாகத் திகழ்கின்ற இத்தகைய நல்ல வழக்கங்களை உணர்ந்து, இவற்றை நடைமுறையாகப் பின்பற்றும் முயற்சியில் முன்னேற்றம் காண்பதே நமக்குக்  கிடைக்கும் உண்மையான உயர்வு ஆகும்.

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *