உடல்நலம்:
பலவகையான காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு இருந்தாலும், நம்முடைய விருப்பத்திற்கு ஏற்பவும், உடல்நலனுக்கு ஏற்றவகையிலும் உள்ள சிலவற்றை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்து வாங்குகிறோம். அவ்வாறு நாம் விலைகொடுத்து வாங்கிய காய், கனிகள் சத்தானவையாக இருந்தாலும் அவற்றை நேரடியாக அப்படியே எடுத்து உண்பதில்லை.
அவற்றின்மீது படிந்திருக்கும் தூசுகளை, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மருந்துத் தெளிப்புகளை முறையாகக் கழுவி சுத்தம் செய்துவிட்டு, செரிமானத்திற்குக் கடினமான சிலப் பகுதிகளை நீக்கிவிட்டு, கூடுதல் நன்மைக்காகவும் சுவைக்காகவும் மேலும் சிலப் பொருட்களைச் சேர்த்துப் பக்குவமாகச் சமைக்கிறோம்.
அவ்வாறு நாம் சுவையாகச் சமைத்த உணவாக இருந்தாலும், கனிகளாக இருந்தாலும் அவற்றைப் பலரோடு பகிர்ந்து உண்பதே மகிழ்ச்சி என்றும், அவ்வாறு உண்ணும்போது உணவில் உள்ள ஒருசிலப் பகுதிகளையும் விழுங்காமல் தவிர்ப்பதே நல்லது என்றும் கூறுகிறோம்.
நாம் இவ்வளவு கவனமாகத் தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து வயிற்றுக்கு அனுப்பினாலும், அவை மேலும் சில மாற்றங்களுக்கு உட்பட்டு, சத்துகள் மட்டுமே உடலினால் ஏற்கப்பட்டு, மற்றவை விலக்கப்படுகின்றன.
அதாவது, நாம் தேர்ந்தெடுத்த காய், கனிகளின் உள்ளே இருந்த சத்துகள், உடலின் சத்துக்களாக மாறுகின்ற செயல்முறையில், நீக்கவேண்டியதை நீக்கியும், சேர்க்கவேண்டியதைச் சேர்த்தும் முறையாகச் செய்யப்படுகின்ற இந்த வழிமுறைகளே உடல் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கின்றன.
உடல் ஆரோக்கியத்திற்கான இந்த நடைமுறை, மன ஆரோக்கியத்திலும் பின்பற்றப்படுமானால் அதுவே மனநலம் காக்கும் விழிப்புணர்வாகும்.
மனநலம்:
ஒவ்வொரு சூழ்நிலையிலும் உள்ள பல வாய்ப்புகளுள், நமக்குப் பொருத்தமான ஒரு சில வாய்ப்புகளை மட்டுமே நாம் தேர்ந்தெடுக்கிறோம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் அனைத்தும் கச்சிதமாக, முழுமையாக, சுமுகமான நிகழ்வுகளாக, நமக்கேற்ற வகையில் நேரடியாக அமைந்திருக்கும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.
எனவே, தேர்ந்தெடுக்கப்படும் அத்தகைய வாய்ப்புகளை நம்முடைய சிந்தனைக்கும் செயலுக்கும் ஏற்ப வடிவமைப்பதே வாழ்க்கையின் பயணமாகின்றது.
உண்மையில், நாம் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் நம்மிடம் ஒரு தகுதித் தேர்வை நடத்துகிறது. அந்தத் தேர்வைத் திறனோடு அணுகும் சிந்தனையே, அந்த வாய்ப்பை நமக்குச் சாதகமான வாய்ப்பாக அமைக்கிறது.
எனவே, நாம் தேர்ந்தெடுக்கும் நேர்மையான வாய்ப்பு ஆற்றல் மிக்கதாகவே இருந்தாலும், அதன்மேல் படிந்திருக்கும் அறியாமை, அச்சம் போன்ற எதிர்மறைப் பூச்சுகளைத் தைரியமான, நேர்மறையான முயற்சிகளால் சுத்தம் செய்து; இயலாமையைத் தன்னம்பிக்கையால் உரித்து; கோபத்தை நிதானத்தால் நறுக்கி; அலட்சியம், பொறாமை போன்ற குப்பைகளைப் பொறுமையாக நீக்கி; நம்பிக்கையோடு சமைக்கப்படும் அந்த வாய்ப்பு நமக்கேற்ற சுவையோடு செயல் ஆற்றலாக வெளிப்படுகிறது.
மனஉறுதியினால் விளையும் இந்த ஆற்றலை அன்பானவர்களுடன் பகிரும்போது மனதில் மகிழ்ச்சி நிறைகிறது. இதனால் சுயமரியாதையின் பலம் அதிகரித்து, தாழ்வுமனப்பான்மை, ஆணவம் போன்ற கசடுகள் புறந்தள்ளப்பட்டு, மனநலன் மேம்படுகிறது.
இவ்வாறு, வெளியில் இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் விழிப்புணர்வோடு முறையாக நாம் எதிர்கொண்டாலும், அதிலிருந்து வாழ்க்கைக்குத் தேவையான சத்துள்ள அனுபவங்களை முழுமையாக மனதில் ஏற்றுக்கொள்வதும், தேவையற்றதை அவ்வப்போது மனதிலிருந்து வெளியேற்றுவதும், மனதின் ஆரோக்கியத்தை நலமாகக் காக்கும் வழிமுறையாகும்.
“நாம் விரும்பும் ஒரு வாய்ப்பை, நம்மை விரும்பி வரும் சாதகமான வாய்ப்பாக மாற்றுவதற்கும், அதில் தவிர்க்க முடியாத சில சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும் தேவையான திறனே விழிப்புணர்வு” ஆகும். இந்த விழிப்புணர்வே மனநலனைச் சிறப்பாக்கும் சிந்தனையாகும்.
சிறப்புகள்:
வாய்ப்புகளை வாழ்க்கையாக மாற்றுகின்ற இந்த வழிமுறையில், ஆக்கபூர்வமான செயல்களைப் பொருத்தமாக வெளிப்படுத்தும் திறனுள்ள சிந்தனைகளே வாழ்க்கையை வடிவமைக்கும் சிந்தனைகளாகும்.
சிறந்த புத்தகங்களும், அறிவார்ந்த பெரியவர்களின் வார்த்தைகளும், நல்ல நட்பும், உறவுகளின் அன்பும் நமக்கு உடனுக்குடன் சக்தித் தருகின்ற அற்புதமான சத்து மாத்திரைகளாகும்.
இத்தகைய நம்பிக்கையான துணைகளோடு, நாம் சந்திக்கும் சூழ்நிலைகளை விழிப்போடு கையாளும் திறனும் பெற்றுவிட்டால், மனதை நினைவுகளின் கிடங்காக நிறைத்து, அடைத்து வைக்காமல், சிறந்த அனுபவங்களின் கூடமாக அழகாக அமைப்பதும் சாத்தியமாகும்.
இதனால் ஏற்படும் மனத்தெளிவு செயல்களிலும் வெளிப்பட்டு, வாழ்நாள் முழுவதும் நலம் தருகின்ற மனஅமைதியை உருவாக்கும்.
# நன்றி.