“ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, மூங்கில் போல் சூழ்ந்து..” என்ற வாழ்த்துமொழிக்கேற்ப மனிதர்கள் வாழவேண்டிய முறைக்குத் தாவரங்கள் முன்னோடிகளாகத் திகழ்கின்றன.
மிகச்சிறிய புல் பூண்டு முதல் ஓங்கி உயர்ந்து, பலகிளைகளுடன் பரவியிருந்து, விழுதுகள் விட்டு விரிந்திருக்கும் உறுதியான மரங்கள் வரை அனைத்துமே அவைதம் குறிக்கோளின் பாதையில் தலைநிமிர்ந்து நிற்கின்றன.
அவற்றின் தன்னம்பிக்கையால், பயனுள்ள பயணத்தால், வளம் தரும் நிலையால், நலம்தரும் பண்பால் மனிதர்களின் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பாடங்களாக விளங்குகின்றன.
அவை, தங்களுக்குள் பொதிந்து வைத்திருக்கும் எண்ணற்ற பதிவுகளைக் காலத்தின் கட்டளைக்கு ஏற்ப மாறுகின்ற பருவத்தின் பலன்களாக, முறையாக வெளிப்படுத்தி உலகத்தின் வளங்களை உயர்த்துகின்றன.
பூமி எங்கும் பச்சைக் கம்பளம் விரித்து, உலகத்தின் உயிர்த்தேவையான சுவாசத்தை அளித்து, அன்பான கரங்களில் சுவையான கனிகள் தாங்கி, பூத்துக் குலுங்கும் பலவண்ண மலர்களால் வாழ்த்துகள் கூறி, தாம் வாழும் முறையினால் நாம் வாழும் முறைக்கு நல்ல வழிகாட்டுதலையும் கூறுகின்றன.
பயணம் தருகின்ற பாடம்:
மிகப் பெரிய மரமாக வளரும் ஆற்றலைத் தனக்குள்ளே வைத்திருக்கும் விதையாக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட அதன் வளர்ச்சிப் பயணம் இயற்கையைச் சார்ந்தே உள்ளது. இந்நிலையில், அந்த இயற்கையில் உருவாகும் சவாலான கால மாற்றங்களையும், எதிரான சூழல்களையும் சந்திக்கும் திறனுள்ள விதையே தக்கது வாழும் என்று நிரூபித்து, பூமியில் அதற்கான நிலையான இடத்தைப் பெறுகின்றது.
விதைக்கப்படுவதை விழிப்போடு உணர்கின்ற தருணத்திலிருந்து ஒரு விதையின் சுயமுயற்சிப் பயணம் தொடங்குகிறது. தகுந்த நேரத்தில் வேரூன்றி, பசுந்தளிராக எழுந்து, செடியாக வளரும் நிலையிலும், வாழும் காலத்திலும் பாதிப்பு ஏற்படுத்துகின்ற பலவிதமான தாக்குதல்களைத் தொடர்ந்து சந்திக்கின்றது.
பலவீனத்தை ஏற்படுத்துகின்ற பலவிதமான சூழல்களை எதிர்த்து விடாமுயற்சியோடு போராடி, தற்காத்துக்கொண்டு, தொடர்ந்து பலப்படுத்திக்கொண்டு, எட்டுத்திக்கும் கிளைகளை விரித்து எழுந்து நிற்கும் மரம், புத்துணர்ச்சிப்பெற்ற வீரனைப்போல மேலும் வலிமையோடு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.
மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள், கனிகள், விதைகள் என்று தன்னுடைய பயணத்தின் விதிக்கப்பட்ட பலன்களைத் தருகின்ற மரங்கள், பறவைகள் வாழும் சரணாலயமாக, குளிர்நிழல் தரும் குடையாக, பல்லுயிர்க்கும் பாதுகாவலாக, கண்ணில் தெரிகின்ற கற்பகத்தருவாக விளங்குகிறது.
மேலும், எந்நிலையிலும் பசுமையை மீட்டெடுக்கும் பயணத்தில் தானும் மகிழ்ந்து உலகத்தையும் மகிழ்விக்கும் உன்னதமான நோக்கத்தில் தினமும் வெற்றிப்பெறுகின்றது.
மாண்புமிகு மரங்கள்:
உலகத்து உயிர்களுக்கெல்லாம் உணவளிக்கும் அன்னையாக, தங்கும் நிழல்தந்து காக்கும் தந்தையாக உயர்ந்து நிற்கும் மரங்கள் உலகத்தின் சமநிலையைக் கூறுகின்றன.
தனக்கு இடம் தந்த பூமிக்குப் பசுமையின் அழகு தந்து, மகிழ்ச்சியின் அடையாளமாகத் திகழ்ந்து பேர்சொல்லும் பிள்ளைகள் ஆகின்றன.
சூரியஒளியில் உணவுத்தயாரிக்கும் முறைக்கு முன்னோடியாக இருந்து, சூரிய ஆற்றலைச் சிறப்பாகப் பயன்படுத்தும் அறிவின் முதல்நிலை ஆசானாகத் திகழ்கின்றன.
கவிந்திருக்கும் பசுங்கூந்தலின் அழகுக்கு மேலும் அழகூட்டும் புதுமலர்சூடி, பார்க்கும்போதே பரவசமாக்கும் பாங்கான தோழிகளாகிப் புன்னகைப் பூக்கின்றன.
நல்லவர்கள் போலவே ஆபத்தானவர்களும் இருக்கலாம் என்று உணர்த்தும் எச்சரிக்கையின் பாடமாகச் சில படைப்புகளும் இருக்கின்றன.
உணவாக மருந்தையும், மருந்தாக உணவையும் மாற்றிக் காட்டும் ஜாலங்களும் செய்கின்றன.
வாழும் இடத்தை அழகாக்கி, வாழ்க்கையை மேலும் வளமாக்கும் வையகத்தின் தேவதைகளாக வாழ்கின்றன.
மண்ணின் வளம், மழையின் நீர், சூழலின் காற்று என, தான் பெறுகின்ற அன்பின் சங்கமத்திற்கு நன்றியாக, பசுமையின் வளம்கூட்டி, மழையின் நீர்ப்பெருக்கி, தூயக்காற்றின் தொழிற்சாலையாகி, இயற்கையின் இன்பம் நவிலும் இணையற்ற நாயகன் ஆகின்றன.
பல உயிர்களின் கூடாகவும், நிழல் தரும் வீடாகவும், எந்நிலையிலும் மற்றவர் நலன் நாடும் நல்ல நண்பனாகவும், வள்ளலின் செல்வமாகவும் மகிழ்ச்சித் தருகின்றன.
காகிதம் முதல் கருவிகள் வரை உலகத்தேவைக்கேற்ப உருவத்தை வளைத்து, வாழும் காலத்தை வடிவான புகழோடு நீட்டிக்கும் வரம்பெற்ற வித்தகனாக மாறுகின்றன.
தன்னை மட்டுமே வாழவந்தவனாக நினைக்கும் சுயநல மனிதனுக்கு, வாழ்வதற்கான வாய்ப்பு சமமாக இருக்க வேண்டும் என்றுணர்த்தும் நேசனாக விளங்குகின்றன.
“வாழும்போதே வாழ்வளிக்கும் சிறப்பைப் பெறுவதே முழுமையான வாழ்க்கை” என்ற உபதேசத்தின் காட்சியாக, ஆண்டுகள் பல கடந்து நிற்கும் குருவின் சாட்சியாக அமைதியாக இருக்கின்றன.
பிரமாண்டம்:
இயற்கையின் ஆற்றலில் முக்கிய பங்களிப்பாக இருந்தும், அலட்டல் ஏதும் இல்லாமல் நிலமிசை நீடு வாழும் பெருமை பெற்ற மரங்களின் நிறைவான பிரமாண்டக் காட்சி நம்மை மேலும்மேலும் பிரமிக்க வைக்கிறது.
மரியாதைக்குரிய மரங்களின் மௌன வேள்வியில் பிறக்கும் மகிழ்ச்சி, உலகத்து உயிர்களின் பொதுவான வரமாக, நித்தியத்தின் பொதுவுடைமையாக, உயிர்க்காற்றை அளித்து புத்துணர்ச்சியோடு வாழவைக்கின்றன.
சவால்களை எதிர்கொண்டு நிலைபெற்று முழுமையாக வாழ்வதும், அந்த வாழ்க்கையில் மற்றவர்களுக்கும் பயன்தரும் வகையில் இருப்பதும், கிடைத்த வாழ்க்கைக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பாக வாழ்க்கையைச் சிறப்பாக அமைப்பதும் தன்னம்பிக்கையின் இலக்கணம் ஆகும்.
இந்த இலக்கணத்தின்படி தன்னம்பிக்கையோடு சிறப்பாக வாழும் தாவரங்கள் இயற்கை வளம் பெருக்கி, வாழ்நாள்தோறும் வேர் முதல் விதை வரை பயன்களைத் தந்து, தங்கள் மிச்சங்களும், எச்சங்களும்கூட வீணாகாமல் உலகத்தின் தேவையோடு இணைத்துக்கொள்கின்றன.
இத்தகைய பெருமைகள் நிறைந்திருக்கும் தாவரங்களின் பிரதிநிதியாக விளங்கும் மரம், நிலையான உறுதித்தன்மையாலும், பயனுள்ள வாழ்க்கைப் பயணத்தாலும் உலகத்திற்கே வாழும்வகை கூறும் போதிமரம் ஆகின்றது. இத்தகைய சிறப்புகள் பெற்ற மரம் மனிதனுக்குத் தேவையான தன்னம்பிக்கையின் சின்னமாக விளங்குவது முற்றிலும் பொருத்தம்தானே!
# நன்றி.