அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வளர்ச்சி:
இந்தப் புத்தாண்டு சிறப்பான காலமாக அமைந்து, உலக மக்கள் அனைவருக்கும் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் தரவேண்டும் என்பதே நமது ஒருமித்த எண்ணமாக ஒலிக்கிறது.
கடந்த காலச் சூழலினால், போன்சாய் மரங்களைப் போல குறுக்கிக் கொண்ட வாழ்க்கையை, இனி வரும் காலங்களில் நாலாப்புறமும் சுதந்திரமாகக் கிளைபரப்பி, நின்று நிமிர்ந்து வளர்ந்து வளம் பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்.
ஒரு மரம் ஓங்கி உயர்ந்து செழித்து வளர, அந்த மரத்தின் வேர்கள் கட்டுகளற்று நிலத்தில் பரவி, உறுதியாக ஊன்றி இருக்க வேண்டியது அவசியம். விடுதலையான வேர்களின் உறுதியே, மரத்தின் சுதந்திரமான வளமையைத் தீர்மானிக்கும்.
எண்ணங்களின் விடுதலை:
தவிர்க்க வேண்டிய ஏதாவது ஒரு இயலாமையின் பிடியில் சிக்கியிருக்கும் எண்ணங்களை, விடுவித்துக் கொள்வது மனதிற்குச் சுதந்திரமான உணர்வைக் கொடுக்கும். இந்தச் சுதந்திர உணர்வே நம்முடைய நம்பிக்கையையும், நேர்மறையான எண்ணங்களையும் வலிமையாக்குகிறது. இத்தகைய வலிமையான, நேர்மறையான எண்ணங்களே சுதந்திரமான செயல்பாடாக வெளிப்பட்டு, வாழ்க்கை வளம் பெறுவதற்கான வாய்ப்புகளை வரவேற்கிறது.
பொதுவழி:
அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தி பரிமாறும்போது நேர்மறை எண்ணங்கள் மேலும் வலிமை அடைகின்றன. சுதந்திரமான அன்பு மதிப்பு மிக்கது. அது எவருக்கும் அடிமையாகவோ அல்லது எவரையும் அடிமையாக்கவோ நினைக்காது.
ஒருவர் தனது அன்பை வெளிப்படுத்தும் முறை அவருடைய தனிப்பட்ட வழியாக இருக்கலாம். ஆனால் இந்த அன்பு, உலகம் மொத்தமும் மகிழ்ச்சியாக வெற்றிபெற காரணமாக இருக்கும் ஒரேவழியாக, அனைவருக்கும் பொதுவான வழியாக இருக்கிறது.
சுதந்திரமான சுவாசம்:
புத்தாண்டின் உறுதிமொழிகளான பல விதமான தீர்மானங்களை, வெற்றிகரமாகச் செயலாக்கும் சக்தி நேர்மறையான எண்ணங்களுக்கே உண்டு. எண்ணிக்கையில் ஒருவராக வாழ்வதும், எண்ணிப்பார்க்கும் வகையில் வாழ்வதும், அவரவர் எண்ணங்களின் வளத்தைப் பொறுத்தே அமைகிறது.
நேர்மறையான சிந்தனைகளுடன், அன்பும், நம்பிக்கையும், மகிழ்ச்சியும், நன்றியும் ஒருவருக்கொருவர் பரிமாறி இதமான சூழலுக்கு வழி செய்வோம். இதனால் உருவாகும் உயர்ந்த எண்ணங்களும் வளமான வாழ்க்கையும் பெற்று நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்ற வாழ்த்துகளுடன், நன்றி கூறுகிறேன்.