காலம் சொல்லும் பாடம்:
நேற்று, இன்று, நாளை என்ற இந்த வார்த்தைகள் நேரிடையாக மூன்று நாட்களைக் குறிப்பதாக இருந்தாலும், சில நேரங்களில் அவற்றின் நீட்சி, வாமனன் அளந்த மூன்று அடிபோல், எல்லையை விரித்துக் காலங்களைக் கடந்தும் நிற்கலாம்.
இன்று என்பது நிகழ்காலத்தில் காலூன்றி, நேற்றைய கற்காலத்திற்கும், அறிவியலின் உச்சம் தொடப்போகும் நாளைய எதிர் காலத்திற்கும் நம்மை ஒருநொடியில் பயணப்பட வைக்கும் வார்த்தைகளாக இவை இருக்கின்றன.
நேற்றைய விதையில் முளைத்த இன்றைய மரம், நாளை வானளாவி வளர்ந்து கனிகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு பயணிப்பதுதான் வாழ்க்கை. நேற்றைய பதிவுகளை நன்றியோடு ஏற்றுக்கொள்ளும் நிலையில், இன்றைய நிகழ்வுகள் நன்மையாகவே நடக்கும். இதனால் நாளைய வரவுகளும் சிறப்பாக அமையும்.
கடந்தகால சிக்கல்களிலிருந்து விடுபடாத மனம் நிகழ்காலத்தில் குழப்பத்தையே ஏற்படுத்தும். நேற்றைய எல்லா நிகழ்வுகளும் நன்மைக்கே என்ற எண்ணமே, இன்றைய சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய தெளிவான சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமையும்.
கடந்தகாலக் கர்ணன்:
விடுகதையாக இருந்த கடந்தகாலத்தைத் தன் நினைவுகளால் நெருப்பாக்கிய கர்ணன், அந்த நெருப்பிற்கு நிகழ்காலத்தின் வரங்களை விறகாக்கினான். விடுகதையின் விடை தெரிந்த நிலையில் எதிர்காலத்தையும் அந்தத் தீயில் சமர்ப்பித்து விட்டான்.
கர்ணனின் அமைதியற்ற மனதில் உருவான வலிமையான உணர்ச்சிகள், ஒவ்வொரு கட்டத்திலும் அவனையே கடத்திச்சென்று அவன் வாழ்க்கையைத் திசைமாற்றின.
விதிமீறியதன் விளைவாக, குருகுலக் கல்வி அதன் பயனை இழந்ததுபோல, சமாதானம் சரிவராத சல்லியனைத் தேரோட்டியாகக் கொண்டதுபோல, விளைவைக் கணிக்காத, உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறைகள் பலநேரங்களில் அவனுக்கு எதிராக செயல்பட்டன.
அதிரதன் அன்பால், அரசனுக்கு நிகரான பண்புகளோடு வளர்ந்த கர்ணன், எந்நிலையிலும் கொடுத்த வாக்கைக் காத்து நின்ற பண்பாளன். பீஷ்மரும், கண்ணனும் வியந்துபார்த்த அசாத்திய வீரன். கர்ணனைப் போல கொடுத்தவரில்லை என்ற புகழைப் பெற்ற சீராளன். அத்தனை உயர்ந்த புகழும், அங்க நாட்டு மன்னன் என்ற வளமும், இதற்குக் காரணமாக இருந்த துரியோதனின் ஈடுஇணையற்ற நட்பும் கர்ணனின் நிகழ்கால வாழ்க்கையில் பிரகாசமாக நிறைந்திருந்தன.
ஆனால் கர்ணன், நிகழ்காலத்தில் இருந்தபோதும் மனதளவில் கடந்தகாலத்திலேயே வாழ்ந்தான். இதுவே அவனுடைய இறக்கத்திற்கு முக்கிய காரணம் என்பதை உணர முடியாத பரிதாபத்திற்குரிய மாவீரன்.
பேழையின் வஸ்திரம் உறவின் வேரை அடையாளம் காட்டியது. போரின் அஸ்திரம் உறவைத் துறக்க வழிகாட்டியது. கடந்துசென்றதை மறக்க முடியாத காரணத்தால், முயன்று வென்றதைத் துறக்கத் துணிந்தான் கர்ணன்.
நிகழ்காலக் கண்ணன்:
பிறக்கும் முன்பே கம்சனுக்கு எதிரியாக நிர்ணயிக்கப்பட்டவன். அரண்மனையில் பிறந்து வாசுதேவகிருஷ்ணனாக ஏழு சகோதரர்களுடன் வளர்ந்திருக்க வேண்டிய கண்ணன், சிறையில் பிறந்து, நந்தகோபகுமாரனாக கோபியர்களுடன் வளர்ந்தான். குருகுலம் செல்லும் வயதில் கோகுலத்தில் மாடுகளை மேய்த்தான்.
தான் சந்தித்தச் சோதனைகளைச் சொந்தம் கொள்ளாத கண்ணன், அவற்றை மாறுபட்ட அனுபவங்களாக எதிர்கொண்டான். கடந்தகாலப் பதிவுகளை, நிகழ்காலத்திற்கு வழிகாட்டும் கைவிளக்காக, பக்குவமாகப் பயன்படுத்தினான். என்ன தவம் செய்தாய் யசோதா! என்று பாரோர் புகழும் புருஷோத்தமனாக, மதிநிறைந்தவனாக, மனதிற்கினியவனாக வாழ்ந்தான்.
கண்ணன், காலம் என்னும் காற்றுக் கைவசம் ஆகும்வரை தன் எண்ணத்தின் கீதத்தை இசைக்காத அமைதியான புல்லாங்குழல். ஆயுதங்களை வரங்களாகப் பெற்ற வீரர்களின் எண்ணங்களைக் கடிவாளமிட்டு வழிநடத்திய தேரோட்டி. சூழலின் சூட்சுமத்தை அறிந்து, திட்டமிட்டுச் செயல்படும் கண்ணன், அலைபாயாத தெளிந்த சிந்தனையால் மிக உயர்ந்து நின்றான்.
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”, என்ற எண்ணமே, கண்ணன் தன் வாழ்க்கையைப் புத்தம்புதியதாக அணுகுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. இதுவே அவன் சந்தித்தத் திடீர் திருப்பங்களையும், போராட்டங்களையும் நிதானமாக அணுகும் ஆற்றலைத் தந்தது.
“எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்” என்ற அவனுடைய எதிர்கால நம்பிக்கையே, பலனை நோக்கி திட்டமிட்டுப் பாடுபடும், “நிகழ்காலத்தின் விஸ்வரூபமாக” வெளிப்பட்டது.
# நன்றி.